சின்ன டீம் கூடதான் விக்கெட் எடுப்பார் பெரிய டீம் கூட முடியாது! ரஷித் கானை விமர்சித்த இந்திய முன்னாள் வீரர்!
பெரிய அணிகளுடன் விளையாடும்போது ரஷித் கான் தன்னுடைய பந்துவீச்சில் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை என முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் வருண் ஆரோன் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் : அணியில் பந்துவீச்சில் தூண் என்றால் லெக்-ஸ்பின்னர் ரஷித் கான் என்று சொல்லலாம். அந்த அளவுக்கு அணியின் வளர்ச்சிக்கு முக்கிய பங்குவகித்திருக்கிறார். கடந்த 4 வருடங்களாக டி20, ஐ.பி.எல்., பி.எஸ்.எல்., பி.பி.எல்., கார்பியன் பிரீமியர் லீக் போன்ற லீக் போட்டிகளில் தொடர்ந்து சிறப்பாக விளையாடி பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார். சர்வதேச போட்டிகளில் அதிக பொருளாதார பந்துவீச்சாளர் (Economical Bowler) என்ற பெயரை பெற்றுள்ளார்.
இவர் சிறப்பாக விளையாடி வருவதன் காரணமாக சரியான தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்கிற விமர்சனங்களும் இவர் மீது வருவது என்பது மிகவும் குறைவு தான். ஒரு சில முன்னாள் வீரர்கள் மட்டும் தங்களுடைய கருத்துக்களை வைக்கும்போது வெளிப்படையாக விமர்சனம் செய்து பேசுவார்கள். அந்த வகையில், இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் வருண் ஆரோன் சமீபத்திய பேட்டி ஒன்றில் ” ரஷித் கான் சிறிய அணிகளுக்கு எதிராக மட்டுமே அதிக விக்கெட்டுகள் வீழ்த்துகிறார்” என தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் ” என்னை பொறுத்தவரை ரஷித் கான் ஒருநாள் சர்வதேச (ODI) போட்டிகளில் பெரும்பாலான விக்கெட்டுகளை Associate Nations (ரேங்கிங் குறைவான அணிகள்) எதிராகவே எடுத்துள்ளார். ஆனால், அதே சமயம் பெரிய அணிகளுக்கு எதிராக அவரின் பந்துவீச்சு அந்தளவு பயனளிக்கவில்லை. அவரால் பெரிய அணிகளுக்கு எதிராக அதிகமான விக்கெட்களை வீழ்த்த முடியவில்லை” என்று விமர்சித்துள்ளார்.
“ரஷித் பல்வேறு T20 லீக் போட்டிகளில் விளையாடுவதால், உலகின் முன்னணி வீரர்கள் அவரை நன்கு அறிந்துகொண்டுவிட்டனர். அவருக்கு எதிராக மிகுந்த கவனத்துடன் விளையாடுவதால், அவர்கள் அவருக்கு எளிதாக விக்கெட்டை கொடுக்க மாட்டார்கள். இதன் காரணமாக தான் அவரால் சின்ன அணியுடன் விளையாடும்போது அதிகமாக விக்கெட்கள் எடுக்க முடிகிறது. பெரிய அணிகளுக்கு எதிராக விளையாடும்போது வேறு மாதிரி விளையாட அவர் முயற்சி செய்யவேண்டும்” எனவும் முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் வருண் ஆரோன் தெரிவித்துள்ளார்.