கே.ஜே.யேசுதாஸ் உடல்நிலைக்கு என்னவாயிற்று? மருத்துவமனையில் திடீர் சிகிச்சை!
சென்னை தனியார் மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டுள்ள பாடகர் கே.ஜே.யேசுதாஸுக்கு ரத்த அணுக்கள் தொடர்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

சென்னை : எம்.ஜி.ஆர் – சிவாஜி காலத்தில் இருந்து சினிமாவில் பாட துவங்கி, தற்போது அஜித் – விஜயை தொடர்ந்து தற்போதைய இளம் தலைமுறை காலம் வரையில் பாடிக்கொண்டிருப்பவர் கே.ஜே.யேசுதாஸ். தனது தனித்துவமான இனிமையான குரல் வளத்தால் ரசிகர்கள் இதயத்தை வருட செய்தவர் கே.ஜே.யேசுதாஸ்.
இவர் கடந்த ஜனவரி 10ஆம் தேதியன்று தான் தனது 85வது பிறந்தநாளை கொண்டாடினார். மலையாளம், தமிழ், இந்தி, கன்னடம், தெலுங்கு, வங்களாம், குஜராத்தி, ஒரியா, மராத்தி, பஞ்சாபி, சமஸ்கிருதம் என பல மொழிகளில் தனது குரல் வளத்தால் ரசிகர்கள் மனதில் ஆட்சி செய்தவர் கே.ஜே.யேசுதாஸ்.
இவர் தற்போது உடல்நலக்குறைவு ஏற்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ரத்த அணுக்கள் தொடர்பான பிரச்சனை ஏற்பட்டதால் அவருக்கு உரிய சிகிச்சை அளித்து வருவதாக தனியார் மருத்துவமனை தரப்பு செய்திகள் வெளியிட்டு வருகின்றன.
தற்போது, யேசுதாஸ் நலமுடன் இருப்பதாகவும், மருத்துவ பரிசோதனைகள் முடிந்த பிறகு நலமுடன் வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து ரசிகர்கள், பிரபலங்கள், யேசுதாஸ் விரைவில் பூரண நலம் பெற வேண்டும் என பிரார்த்தனைகளையும், வாழ்த்துக்களையும் கூறி வருகின்றனர்.