கம்பீர் செய்வது நியாயமில்லை., கே.எல்.ராகுலுக்காக சண்டைக்கு செல்லும் முன்னாள் நட்சத்திர வீரர்!
கடந்த இரு ஒருநாள் போட்டிகளிலும் கே.எல்.ராகுலுக்கு முன்னர் அக்சர் படேல் களமிறக்கப்பட்டதற்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

அகமதாபாத் : இந்திய கிரிக்கெட் அணியும், இங்கிலாந்து கிரிக்கெட் அணியும் டி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி 4-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரை வென்றது. அடுத்து ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி விளையாடிய 2 ஒருநாள் போட்டிகளிலும் வென்று இங்கிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட தொடரை கைப்பற்றியது.
நாளை நடைபெறும் 3வது ஒருநாள் போட்டியை அடுத்து இந்திய கிரிக்கெட் அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்க உள்ளது. ஒருநாள் தொடராக நடைபெறும் இந்த சாம்பியன்ஸ் தொடருக்கு ஒரு முன்னோட்டமாக இந்த இங்கிலாந்துக்கு எதிரான தொடர் பார்க்கப்படுகிறது. இதில் பங்கேற்கும் வீரர்கள் பெரும்பாலும் சாம்பியன்ஸ் டிராபி அணியில் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கே.எல்.ராகுல்? ரிஷப் பண்ட்?
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக கே.எல்.ராகுல், ரிஷப் பண்ட் என இருவருமே இடம்பெற்றுள்ளனர். இதில் யார் 11 பேர் கொண்ட அணியில் இடம் பெறுவார் என தெரியவில்லை. இந்நிலையில் நடப்பு இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் கே.எல்.ராகுல் தான் இடம் பெற்றுள்ளார். அதனால், கே.எல்.ராகுல் , 11 பேர் கொண்ட இந்திய அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது. ஆனால், அதற்கான போதிய பேட்டிங் வாய்ப்புகளை இந்த தொடரில் கே.எல்.ராகுலுக்கு பயிற்சியாளர் கம்பீர் வழங்கவில்லை என்ற குற்றசாட்டு எழுந்துள்ளது.
கடந்த 2 போட்டிகளிலுமே பேட்ஸ்மேன் கே.எல்.ராகுலுக்கு முன்னதாக ஆல்ரவுண்டர் அக்சர் படேலை களமிறங்குகிறது இந்திய அணி. இதனால் அவருக்கு போதிய வாய்ப்புகள் வழங்கப்படவில்லை எனக் கூறி 1983 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியில் நட்சத்திர வீரராக இருந்த கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், பயிற்சியாளர் கம்பீரை கடுமையாக சாடியுள்ளார்.
ராகுலுக்கு துரதிர்ஷ்டவசமான தொடர்
அவர் தனது யூ-டியூப் பக்கத்தில் பேசுகையில், “ஷ்ரேயாஸ் ஐயர் நல்ல ஃபார்மில் இருக்கிறார். இது இந்தியாவுக்கு சாதகமான விஷயம். ஆனால், கே.எல். ராகுலுக்கு இது மிகவும் துரதிர்ஷ்டவசமான தொடர். ஆம், அக்சர் படேல் 30 மற்றும் 40 ரன்கள் எடுத்து வருகிறார். ஆனால், கே.எல். ராகுலுலுக்கு இந்திய தலைமை செய்வது நியாயமில்லை. அவரது சாதனையைப் பாருங்கள், அவர் 5வது இடத்தில் பல சாதனைகளுடன் சிறந்து விளங்கினார். அவரது நிலை குறித்து அணி நிர்வாகம் என்ன நினைக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. அவர் 6 அல்லது 7வது இடத்தில் பேட்டிங் செய்தால், அவரால் 6 அல்லது 7 ரன்கள் மட்டுமே எடுப்பார். இது நியாயமற்றது.
கம்பீர் செய்வது சரியில்லை
கம்பீர் செய்வது சரியில்லை. ஆமாம், சூழ்நிலையைப் பொறுத்து, இந்தியா அக்சரை 5வது இடத்தில் அனுப்பலாம். ஆனால் தொடர்ச்சியாக அவரை அதே இடத்தில் களமிறக்க முடியாது. நீங்கள் தொடர்ந்து இதுபோன்ற மாற்றங்களைச் செய்தால், ஒரு கட்டத்தில் எல்லாம் சிதைந்து போகும். அதுதான் எனக்கு கவலை அளிக்கிறது.
இடது-வலது கை பேட்ஸ்மேன் களமிறங்க வேண்டும் என நீங்கள் அதை நியாயப்படுத்த முடியாது. அப்படியென்றால் முதல் நான்கு இடங்களில் அதே இடது-வலது கை பேட்ஸ்மேன்கள் களமிறங்குவது பற்றி நீங்கள் கவலைப்படவில்லையா? அது ஏன் 5வது இடத்தில் மட்டும் இடது – வலது கை பேட்ஸ்மேன் களமிறங்குவது முக்கியமானது?
எனக்கு அக்சர் படேல் மேல் எந்தப் பிரச்சினையும் இல்லை. அவர் தனது வாய்ப்புகளை நன்கு பயன்படுத்திக் கொள்கிறார். ஆனால், நீங்கள் ராகுலை அதற்காக கீழே தள்ளினால், ரிஷப் பண்டை அந்த இடத்தில் விளையாட வையுங்கள். ராகுலின் நம்பிக்கையை ஏன் குறைமதிப்பிற்கு உட்படுத்த வேண்டும்?
5வது இடம் யாருக்கு?
இப்போது, நீங்கள் செய்தது என்னவென்றால், ரிஷப் பண்டையும் ஓரங்கட்டிவிட்டீர்கள். கே.எல்.ராகுலையும் விளையாட அனுமதிக்கவில்லை. அவர்களில் ஒருவர் விளையாட வேண்டும். மூன்றாவது ஒருநாள் போட்டியிலும், பின்னர் சாம்பியன்ஸ் டிராபியிலும் பண்ட் இடம்பெறுவார் என்று நான் நினைக்கிறேன். அப்போது ராகுல் பெஞ்சில் அமரவைக்கப்படுவார். இடது கை பழக்கம் உள்ளவரா அல்லது வலது கை பழக்கம் உள்ளவரா என்பதைப் பொருட்படுத்தாமல், இந்திய அணிக்கு சிறந்த வீரரை 5வது இடத்தில் விளையாட வைக்க வேண்டும்.” என கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தெரிவித்தார்.