இவங்க தான் இந்தியாவோட பெஸ்ட் வீரர்கள்! ரவி சாஸ்திரி தேர்வு செய்த 5 பேர்?
சுனில் கவாஸ்கர் இந்தியாவை உலக அரங்கில் அறிமுகப்படுத்திய முதல் பேட்ஸ்மேன் என ரவி சாஸ்திரி பாராட்டி பேசியுள்ளார்.

டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், பயிற்சியாளருமான ரவி சாஸ்திரி, 2025 ஜூலை 21 அன்று “The Overlap Cricket” என்ற பாட்காஸ்ட் நிகழ்ச்சியில், முன்னாள் இங்கிலாந்து கேப்டன்கள் மைக்கேல் வாகன் மற்றும் அலெஸ்டர் குக் உடன் பேசும்போது, இந்தியாவின் எல்லா காலத்திலும் சிறந்த ஐந்து கிரிக்கெட் வீரர்களைத் தேர்ந்தெடுத்தார். அவரது பட்டியலில் சுனில் கவாஸ்கர், கபில் தேவ், சச்சின் டெண்டுல்கர், எம்எஸ் தோனி, மற்றும் விராட் கோலி ஆகியோர் இடம்பெற்றனர்.
ஆனால், இந்தியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா மற்றும் “தி வால்” என்று அழைக்கப்படும் ராகுல் டிராவிட் ஆகியோர் இந்தப் பட்டியலில் இடம்பெறவில்லை. இது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் ஒரு பக்கம் பேசுபொருளாகவும் வெடித்துள்ளது. நிகழ்ச்சியில் பேசிய “சுனில் கவாஸ்கர் இந்தியாவை உலக அரங்கில் அறிமுகப்படுத்திய முதல் பேட்ஸ்மேன். கபில் தேவ் 1983 உலகக் கோப்பையை வென்ற ஆல்-ரவுண்டர். ஆனால், நான் சச்சின் டெண்டுல்கருக்கு முதலிடம் கொடுப்பேன்.
ஏனெனில் அவர் 24 ஆண்டுகள் இந்தியாவின் எதிர்பார்ப்புகளைச் சுமந்து, 100 சதங்கள் அடித்தவர். அவர் வாசிம் அக்ரம், மெக்ராத், ஆண்டர்சன் உள்ளிட்ட உலகின் சிறந்த பந்துவீச்சாளர்களை எதிர்கொண்டு தனது திறமையை நிரூபித்தார்,” என்று புகழ்ந்தார். அதைப்போல, தோனி மூன்று ஐசிசி கோப்பைகளை வென்றவர், மற்றும் கோலி இந்தியாவை டெஸ்ட் கிரிக்கெட்டில் முன்னணி அணியாக உயர்த்தியவர் எனவே, என்னிடம் சிறந்த வீரர்கள் கேட்டால் இவர்களுடைய பெயர்களை கூறுவேன்” எனவும் தெரிவித்தார்.
ரவி சாஸ்திரி பேசியதை பார்த்த ரசிகர்கள் பலரும் நீங்கள் சொன்ன பட்டியலில் ராகுல் டிராவிட் இல்லை எனவே இந்த பட்டியல் முழுமை பெறாது என தங்களுடைய கருத்துக்களை விமர்சனங்களாக கொட்டி வருகிறார்கள். அதே சமயம் மற்றோரு பக்கம் பும்ரா சிறப்பான பந்துவீச்சாளர் அவரை ஏன் தேர்வு செய்யவில்லை என்கிற கேள்விகளும் எழுந்திருக்கிறது.
ஜஸ்ப்ரித் பும்ராவைப் ரவி சாஸ்திரி தேர்வு செய்யவில்லை என்றாலும் பும்ரா பற்றி பாராட்டி பேசினார். இது குறித்து பேசிய அவர் ” பும்ரா இந்தியாவின் மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளராக இருக்கலாம். மூன்று வடிவங்களிலும் அவரது ஆதிக்கம் அபாரமானது. ஆனால், அவரது கிரிக்கெட் வாழ்க்கை இன்னும் முடியவில்லை. நான் முடித்துவிட்ட வீரர்களை மட்டுமே இந்தப் பட்டியலில் கருதினேன்” எனவும் தெரிவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.