ஒரு வருடத்திற்கு பிறகு டெஸ்ட் போட்டியில் வெற்றி! WTC புள்ளிகள் பட்டியலில் இந்தியாவுடன் இணைந்த பாக்.,!

ஒரு வருடத்திற்கு பிறகு டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றதால் WTC புள்ளிகள் பட்டியலில் இந்தியாவுடன் இணைந்தது பாகிஸ்தான்.
டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி சமீப காலமாக சொல்லு அளவிற்கு சிறப்பாக விளையாடவில்லை. சொந்த மண்ணிலேயே இங்கிலாந்து, ஆஸ்திரேலிய அணிகளிடம் தோல்வியடை சந்தித்து, பாகிஸ்தான் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது. இதனால், பாகிஸ்தான் அணி டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று கிட்டத்தட்ட ஓராண்டுகள் கடந்தது. இந்த சமயத்தில், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட பாகிஸ்தான், இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது.
அதன்படி, இலங்கை- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலேயில் நடந்து வந்தது. ஜூலை 16-ஆம் தேதி தொடங்கிய டெஸ்ட் போட்டியில், டாஸ் வென்ற கருணரத்னே தலைமையிலான இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தார். இதில் முதல் இன்னிங்சில் இலங்கை 312 ரன்னும், பாகிஸ்தான் 461 ரன்னும் எடுத்தன. 149 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை விளையாடிய இலங்கை 279 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது.
இதனால் பாகிஸ்தான் அணிக்கு 131 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. நேற்றைய 4-ம் நாள் ஆட்ட நேர முதலில் பாகிஸ்தான் 3 விக்கெட்டுக்கு 48 ரன் எடுத்திருந்தது. இன்று கடைசி நாள் ஆட்டம் தொடங்கிய நிலையில், பாகிஸ்தான் அணி 6 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 133 ரன்கள் எடுத்து இலக்கை எட்டியது. இதனால் பாகிஸ்தான் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
எனவே, கடைசியாக பாகிஸ்தான் அணி 2022-ஆம் ஆண்டு ஜூலை 20-ஆம் தேதி டெஸ்ட் போட்டியில் வெற்றியை பதிவு செய்தது. தற்போது, அதே ஜூலை 20-ஆம் தேதி 2023-ஆம் ஆண்டு ஓராண்டு இடைவெளிக்கு பின் வெற்றியை பதிவு செய்துள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு வருடத்தில் பாகிஸ்தான் பெற்ற முதல் வெற்றி இதுவாகும். இந்த வெற்றியின் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) 2023-25 புள்ளிகள் பட்டியலில் 100% புள்ளிகள் வென்றதன் மூலம் பாகிஸ்தான், இந்தியாவுடன் முதலிடத்தில் இணைந்துள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) 2023-25 புள்ளிகள் பட்டியலில் பாகிஸ்தான், இந்தியாவை தொடர்ந்து ஆஸ்திரேலியா 61.11% புள்ளிகளுடன் உள்ளது. காலேயில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், 2-வது டெஸ்ட் கொழும்பில் வருகிற 24-ஆம் தேதி தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.