உங்க முன்னாள் மனைவிக்கு மாசம் ரூ.4 லட்சம் ஜீவனாம்சம் வழங்கணும்! முகமது ஷமிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!
இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி, அவரது முன்னாள் மனைவிக்கு மாதம் ரூ.4 லட்சம் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவு.

கொல்கத்தா: இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி, தனது முன்னாள் மனைவி ஹசின் ஜஹான் மற்றும் அவர்களது மகளுக்கு மாதாந்திர ஜீவனாம்சமாக ரூ.4 லட்சம் வழங்க வேண்டும் என கொல்கத்தா உயர்நீதிமன்றம் 2025 ஜூலை 1 அன்று உத்தரவிட்டது. இந்தத் தீர்ப்பு, ஹசின் ஜஹான் தொடர்ந்த குடும்ப வன்முறை மற்றும் ஜீவனாம்ச வழக்கில் அவருக்கு ஆதரவாக வழங்கப்பட்டது. கடந்த 2018-இல் ஹசின் ஜஹான், ஷமி மீது குடும்ப வன்முறை, கொலை முயற்சி, மற்றும் பல பெண்களுடன் தொடர்பு உள்ளதாக புகார் அளித்திருந்தார். இதையடுத்து, அவர் மாதாந்திர ஜீவனாம்சமாக ரூ.10 லட்சம் கோரியிருந்தார்.
அந்த 10 லட்சத்தில் ரூ.7 லட்சம் தனது செலவுகளுக்கும், ரூ.3 லட்சம் மகளின் பராமரிப்பிற்கும் என்று குறிப்பிட்டிருந்தார். 2023-இல், கீழமை நீதிமன்றம் ஷமிக்கு மாதம் ரூ.1.3 லட்சம் ஜீவனாம்சம் வழங்க உத்தரவிட்டது, ஆனால் இது போதுமானதல்ல எனக் கூறி ஹசின் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த கொல்கத்தா உயர்நீதிமன்றம், ஷமியின் வருமானத்தை கணக்கில் எடுத்து, ஹசின் ஜஹானுக்கு ரூ.1.5 லட்சமும், மகள் ஆய்ராவின் பராமரிப்பிற்கு ரூ.2.5 லட்சமும் உள்ளடங்கிய மொத்தம் ரூ.4 லட்சம் மாதாந்திர ஜீவனாம்சமாக வழங்க உத்தரவிட்டது. இந்தத் தொகையை 2018 முதல் கணக்கிடப்பட்டு, பாக்கி தொகையையும் செலுத்த வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்தத் தீர்ப்பு, ஷமிக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது. ஹசின் ஜஹான், இந்தத் தீர்ப்பை வரவேற்றாலும், தனது முழு கோரிக்கையான ரூ.10 லட்சம் ஜீவனாம்சம் வழங்கப்படவில்லை என்று கூறி மேலும் மேல்முறையீடு செய்யலாம் எனத் தெரிவித்துள்ளார். இந்த வழக்கு, ஷமியின் தனிப்பட்ட வாழ்க்கையில் தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.