”விசாரணை என துன்புறுத்தக் கூடாது” – காவல் துறை அதிகாரிகளுக்கு ஏடிஜிபி அறிவுறுத்தல்.!
காவலர்கள் முதல் அதிகாரிகள் வரை சுய ஒழுக்கம் கண்டிப்பாக இருக்க வேண்டும் என ஏடிஜிபி டேவிட்சன் தேவாசிர்வாதம் அறிவுறுத்தியுள்ளார்.

சென்னை : தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி (ADGP) டேவிட்சன் தேவாசீர்வாதம், காவல்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பல முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். திருப்புவனம் இளைஞர் மரணம் தொடர்பாக அதிகாரிகளுடன் தமிழக சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தின் போது, மண்டல ஐஜி-க்கள், எஸ்.பி-க்கள், அதிகாரிகளுக்கு ஏடிஜிபி பல்வேறு உத்தரவுகளை வழங்கியுள்ளார். அதன்படி, ‘காவலர்கள் முதல் அதிகாரிகள் வரை சுய ஒழுக்கம் கண்டிப்பாக இருக்க வேண்டும். காவலர்கள் ஏதேனும் தவறு செய்தால் அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என அறிவுறுத்தியுள்ளார்.
- புகார் அளிக்க வருபவர்களிடம் பேப்பர் இல்லை, அதிகாரி இல்லை என்று சொல்லி அ அலைக்கழிக்கவோ, திருப்பி அனுப்பவோ கூடாது.
- புகார்கள் உடனடியாக பதிவு செய்யப்பட்டு, எஃப்.ஐ.ஆர். (FIR) மற்றும் சி.எஸ்.ஆர். (CSR) பதிவு செய்யப்பட வேண்டும்.
- முக்கிய பாதுகாப்பு பணிகளில் பெண் காவலர்களை நியமித்தலை தவிர்க்க வேண்டும்.
- குடும்பமாக செல்பவர்களிடம் வாகனத் தணிக்கை என்ற பெயரில் துன்புறுத்தக் கூடாது.
- சாலை மறியல், ஆர்ப்பாட்டம் போன்ற பாதுகாப்பு பணியில் ஈடுபடும்போது லத்தியை பயன்படுத்தக் கூடாது
- கோயில் திருவிழாவில் சாதிய பாகுபாடு, மோதல்கள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
- காவல் நிலையங்களில் பாலியல் தொடர்பான துன்புறுத்தல்கள் எதுவும் இருக்கக் கூடாது.
- விசாரணைக் கைதிகளை தேவையில்லாமல் துன்புறுத்தக் கூடாது.
- ஒரே நபரை மூன்று அல்லது நான்கு காவலர்கள் ஒன்றாக சேர்ந்து விசாரிக்க கூடாது.
- பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகளை உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இந்த அறிவுறுத்தல்கள், திருப்புவனம் லாக்அப் மரணத்தைத் தொடர்ந்து, காவல்துறையின் செயல்பாடுகளை மேம்படுத்தவும், பொதுமக்களுக்கு நம்பிக்கையூட்டவும் வழங்கப்பட்டவையாக தெரிகிறது.