“ஒழுங்காக இருக்கணும். இல்லனா வேற மாதிரி ஆயிடும்” – விருதுநகர் எஸ்பி மிரட்டல் பேச்சால் சர்ச்சை.!
ஆங்காங்கே நின்று கொண்டு கோஷம் போட்டால் வேற மாதிரி ஆயிடும் என்று விருதுநகர் எஸ்பியின் மிரட்டல் பேச்சால் சர்ச்சை எழுந்துள்ளது.

விருதுநகர்: சிவகாசி அருகே சின்னகாமன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலை வெடி விபத்தில் நேற்று 8 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயம் அடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த லிங்கசாமி என்பவர் இன்று (ஜூலை 2) உயிரிழந்தார்.
இந்த விபத்தில் 4 பேர் படுகாயமடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000-ம் நிவாரணமாக அறிவித்துள்ளார்.
விபத்து தொடர்பாக சாத்தூர் நகர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, ஆலை மேற்பார்வையாளர் ரவி (36) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். விருதுநகர் மாவட்ட எஸ்.பி. கண்ணன் மற்றும் சாத்தூர் டிஎஸ்பி நாகராஜன் ஆகியோர் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களின் குடும்பத்திற்கு ஆலை நிர்வாகம் ரூ. 10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டபோது, ஒழுங்கா இருக்கணும், கோஷம் போட்டா வேற மாதிரி ஆயிடும் என்று விருதுநகர் எஸ்பி கண்ணன் மிரட்டல் தொனியில் பேசியதாக சமூக ஊடகங்களில் பதிவுகள் வெளியாகியுள்ளன.
சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்தில் பலியானவர்களது குடும்பத்தினரை கோஷம் போட்டால் வேற மாதிரி ஆகிடும் என மிரட்டல் விடுகிறார் விருதுநகர் மாவட்ட எஸ்பி.
#FireworksAccident #TNPolice #virudhunagar pic.twitter.com/cj8YJLtcGl
— தமிழ் மார்க்ஸ் (@tamilmarxorg) July 2, 2025
பின்னர், எங்களை சுட்டுக்கொல்லுங்கள் என போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் போலீஸாரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். ஆனால், எஸ்.பி. கண்ணன் இவ்வாறு பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது. எஸ்.பி.யின் இந்த பேச்சு பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, இந்த மிரட்டல் குறித்து பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.