ஆர்.சி.பி. வீரர் யாஷ் தயாள் மீது பாலியல் வழக்குப் பதிவு.!
திருமணம் செய்துக் கொள்வதாக கூறி பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக பெங்களூரு அணி பந்துவீச்சாளர் யாஷ் தயாள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

உத்தரபிரதேசம் : காஜியாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது, மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
புகாரின்படி, அந்தப் பெண் தயாலுடன் ஐந்து வருட உறவில் இருந்ததாகவும், அப்போது அவர் திருமணம் செய்து கொள்வதாக பொய்யான வாக்குறுதியின் பேரில் தன்னை மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும், நிதி ரீதியாகவும் சுரண்டியதாகவும் குற்றம் சாட்டினார். மேலும், யாஷ் மீது வேறு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், காசியாபாத்தின் இந்திராபுரம் காவல் நிலையப் பகுதியில் அந்த பெண் அளித்த புகாரின் பேரில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சரின் குறை தீர்க்கும் இணையதளமான ஐஜிஆர்எஸ் மூலம் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், முதற்கட்ட விசாரணையைத் தொடர்ந்து இந்திராபுரம் காவல் நிலையத்தில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது.
இதற்கிடையில், யாஷ் தயாலும் அவரது குடும்பத்தினரும் இந்த விஷயத்தில் இன்னும் கருத்து தெரிவிக்கவில்லை. இடது கை வேகப்பந்து வீச்சாளர் யாஷ் கடைசியாக ஐபிஎல் 2025 -ல் ஆர்சிபி அணிக்காக விளையாடினார். அவர் தனது அணியின் முதல் ஐபிஎல் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார்.