இனிமேல் பேஸ்புக் ப்ளூடிக்கும் ஆப்பு..! எலான் மஸ்க்கை பின்தொடரும் மார்க் ஜுக்கர்பெர்க்..!

பேஸ்புக்க்கின் தாய் நிறுவனமான மெட்டா, ட்விட்டரைப் போல ப்ளூடிக் சந்தா சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.
பிரபல சமூக வலைதளங்களான ட்விட்டர் தற்பொழுது உலகம் முழுவதும் பலரும் பயன்படுத்தக்கூடிய சமூக வலைதளமாக மாறிவிட்டது. முன்னதாக, இந்த ட்விட்டரை உபயோகம் செய்யும் சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட சில பயனர்களுக்கு மட்டுமே ப்ளூடிக் கொடுக்கப்பட்டது.
ஆனால், ட்விட்டரை எலான் மஸ்க் வாங்கியவுடன் சந்தா செலுத்தினால் மட்டுமே ப்ளூடிக் வசதி உண்டு என்ற மாற்றத்தை கொண்டு வந்தார். அதிலிருந்து, பயனர்கள் பலரும் மாதம் சந்தா செலுத்தி ப்ளூடிக்கை வாங்கி வருகின்றனர். இந்நிலையில், ட்விட்டரை போல பேஸ்புக் தாய் நிறுவனமான மெட்டாவும் ப்ளூடிக் சந்தா சேவையான Meta Verified-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.
அதன்படி, மெட்டாவின் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ப்ளூடிக்கை பெறுவதற்கு மாதத்திற்கு £9.99 (ரூ.1,026) செலுத்த வேண்டும். மேலும், சந்தாதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும் மற்றும் தகுதி பெற அதிகாரப்பூர்வ அடையாள அட்டையை சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த அம்சம் ஏற்கனவே அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், தற்பொழுது இங்கிலாந்திலும் அறிமுகப்படுத்தியுள்ளது.