மதுரை பெண் சிசுக்கொலைக்கு காரணமான தந்தை, பாட்டிக்கு அதிக தண்டனை வழங்க வேண்டும் என கனிமொழி எம்.பி கருத்து….

சோழவந்தான் பெண் சிசு கொலை நெஞ்சை உறைய வைக்கிறது என திமுக எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம் சோழவந்தானை சேர்ந்த தம்பதி தவமணி மற்றும் சித்ரா . இந்த தம்பதிகளுக்கு ஏற்கனவே மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நான்காவதாக பெண் குழந்தையை பெற்றெடுத்தார் சித்ரா. இதனிடையே பிறந்த அந்த பெண் சிசு கடந்த சில தினங்களுக்கு முன்னர் உயிரிழந்ததாக கூறப்பட்டு அந்த சிசு வைகையாற்றில் புதைக்கப் பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து சோழவந்தான் கிராம நிர்வாக அலுவலர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து அந்த சிசுவின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை மேற்கொள்ளப் பட்டது. மேலும் காவல்துறையினரின் விசாரனையில், நான்காவதாக பிறந்த குழந்தையும் பெண்ணாக பிறந்ததால் பெற்ற தந்தை மற்றும் பாட்டி ஆகியோர் சிசுவிற்கு கள்ளிப்பால் கொடுத்து கொலை செய்தது தெரிய வந்தது. இதனையடுத்து காவல்துறையினர் அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.
இந்நிலையில், இந்த பெண் சிசுக்கொலை குறித்து கருத்து தெரிவித்துள்ள திமுக எம்.பி கனிமொழி, இந்த பெண் சிசு கொலை நெஞ்சை உறைய வைக்கிறது எனவும், இந்த கொடுஞ்செயலில் ஈடுபட்ட சிசுவின் தந்தை, பாட்டிக்கு உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.