பொள்ளாச்சி வழக்கு 6.5 ஆண்டுகள்…ஞானசேகரன் வழக்கில் 157 நாளில்..இபிஸ்க்கு கனிமொழி பதிலடி!
பொள்ளாச்சி பாலியல் வழக்கு கடந்த வந்த பாதையைக் கொஞ்சம் திரும்பிப் பாருங்கள் என திமுக எம்பி கனிமொழி கூறியுள்ளார்.

சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 23 அன்று ஒரு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ராஜலட்சுமி ஞானசேகரன் மீதான 11 குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டுள்ளது என்பதால் அவரை குற்றவாளியாக அறிவித்தார். இவருக்கு வழங்கப்படும் தண்டனை விவரங்கள் வரும் ஜூன் 2-ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளது.
இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது குறித்து அரசியல் தலைவர்கள் பலரும் வரவேற்பை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் தீர்ப்பு வரவேற்கத்தக்கது ஆனால் யாரைக் காப்பாற்ற இந்த வேகம்? என காட்டத்துடன் சில கேள்விகளையும் முன் வைத்திருந்தார்.
அவர் வைத்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் திமுக எம்பி கனிமொழி அறிக்கை ஒன்றை வெளிட்டுள்ளார். அதில் ” அண்ணா பல்கலைகழக சம்பவம் நடந்த நாளிலிருந்து சரியாக 157-ஆவது நாளில் குற்றவாளியின் தண்டனையை உறுதி செய்திருக்கிறது தமிழகக் காவல் துறை. இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தில், சி.பி.ஐ விசாரணையை கேட்ட போது, ’சிபிஐ விசாரணை தேவையில்லை’ என டி.ஜி.பி அறிக்கை தாக்கல் செய்தார். சிபிஐ கூட இவ்வளவு துரிதமாக விசாரித்திருக்க முடியுமா? எனக் கேட்கும் அளவுக்கு இந்த வழக்கைத் தமிழகக் காவல் துறை மிகச் சிறப்பாக நடத்தி குற்றவாளியின் குற்றத்தை நிரூபித்திருக்கிறது.
இந்த வழக்கு தொடர்பாகக் கடந்த ஜனவரி 8-ம் தேதி சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பேசும்போது, ‘’இந்த வழக்கின் குற்றவாளி மீது தயவுதாட்சணியம் இல்லாமல் காவல்துறை நடவடிக்கை எடுக்கும். இந்த வழக்கில் 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும். விரைவு நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டு, குற்றவாளிக்கு உச்சபட்சத் தண்டனை கிடைக்கும்’’ என்று சொன்னார். அதனைச் செய்து காட்டியிருக்கிறார்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கில் தீர்ப்பு வெளியாவதற்கு 15 நாட்களுக்கு முன்புதான், பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேருக்குச் சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அந்த வழக்கோடு அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கையும் கொஞ்சம் ஒப்பிட்டுப் பாருங்கள்.எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் நடந்த பொள்ளாச்சி பாலியல் வழக்கு நாட்டையே உலுக்கியது. பொள்ளாச்சி பாலியல் குற்றச் சம்பவம் கடந்த 2016-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை நடைபெற்றாலும், 2019-ம் ஆண்டுதான் வெளிச்சத்துக்கு வந்தது.
அன்றைக்குத் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் ஊடகங்களும் பொள்ளாச்சி பாலியல் வழக்கை வெளிக் கொணராமல் போயிருந்தால் அன்றைய எடப்பாடி பழனிசாமி அரசு விவகாரத்தை மூடி மறைத்திருக்கும். அதிமுகவினர் சம்பந்தப்பட்டிருந்ததால் வழக்கைப் பதியாமல் இழுத்தடித்ததோடு பாதிக்கப்பட்ட மாணவியின் அண்ணனையே தாக்க முயன்றார்கள்.
பொள்ளாச்சி பாலியல் வழக்கு கடந்த வந்த பாதையைக் கொஞ்சம் திரும்பிப் பாருங்கள்.
2019 பிப்ரவரி 24 – கல்லூரி மாணவி புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்து 3 பேரைக் கைது செய்தனர்.
2019 மார்ச் 4 – முக்கிய குற்றவாளி திருநாவுக்கரசு கைது.
2019 மார்ச் 12 – சிபிசிஐடிக்கு வழக்கு மாற்றம்.
2019 ஏப்ரல் 27 – வழக்கு சிபிஐ-க்கு மாற்றம்.
2019 மே 21 – முதல் குற்றப்பத்திரிகை தாக்கல்.
2021 ஜனவரி 6 – இறுதி குற்றப்பத்திரிகை தாக்கல்.
2023 பிப்ரவரி 24 – சாட்சி விசாரணை தொடங்கியது.
2024 பிப்ரவரி 23 – குற்றவாளிகள், சாட்சியங்களிடம் தினமும் விசாரணை நடைபெற்றது.
2025 மே 13 – தீர்ப்பு.
2019 பிப்ரவரி தொடங்கி 2025 மே மாதம் வரையிலான ஆறரை ஆண்டுகள் பொள்ளாச்சி பாலியல் வழக்கு நடைபெற்றது. இத்தனைக்கும் அந்த வழக்கை விசாரித்தது சிபிஐ. ஆனால், அண்ணா பல்கலைக்கழக வழக்கை விசாரித்தது தமிழகக் காவல் துறை. பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நியாயம் கிடைக்க ஆறரை ஆண்டு ஆனது. அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கில் 157 நாளில் தீர்ப்பைப் தீர்ப்பை பெற்றுக் கொடுத்திருக்கிறோம். 2019 முதல் 2021 மே வரையில் எடப்பாடி பழனிசாமிதான் ஆட்சியில் இருந்தார். பொள்ளாச்சி பாலியல் வழக்கை அவர் நடத்திய லட்சணத்தை இந்த நாடறியும்” எனவும் காட்டத்துடன் கூறியுள்ளார்.
தமிழகக் காவல்துறை விசாரித்த அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கில் 157 நாளில் தீர்ப்பைப் பெற்றுக் கொடுத்திருக்கிறோம்!
சிபிஐ விசாரித்த பொள்ளாச்சி பாலியல் வழக்கு ஆறரை ஆண்டுகள் நடைபெற்றது!
2019 முதல் 2021 மே வரையில் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் பொள்ளாச்சி பாலியல் வழக்கை நடத்திய… pic.twitter.com/N5WT1iRPQt
— DMK (@arivalayam) May 28, 2025