டெல்லியில் பரபரப்பு! ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’ இரண்டாக உடைந்தது!

நீட் தேர்வு முறைகேடுகளை கண்டித்து டெல்லியில் போராட்டம் நடத்திய கரப்பான் பூச்சி ஜனதா கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது.

Hero Image

டெல்லி : நீட் தேர்வு முறைகேடுகள், தேர்வுத்தாள் கசிவு மற்றும் வேலையில்லாத் திண்டாட்டம் ஆகியவற்றுக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் இளைஞர்களைத் திரட்டிப் போராட்டம் நடத்தி வந்த 'கரப்பான் பூச்சி ஜனதா கட்சி' (Cockroach Janta Party - CJP) தற்போது அதிகாரப்பூர்வமாக இரண்டாக உடைந்துள்ளது.

இந்த இளைஞர்கள் இயக்கத்தின் நிறுவனரான அபிஜீத் திப்கேவுக்கு எதிராக, அக்கட்சியின் முக்கியத் தூணாக இருந்த குஜராத்தைச் சேர்ந்த மணீஷ் பிரம்பட் என்பவர் புதிய கட்சியை தொடங்கி, "கரப்பான் பூச்சி ஜனதா கட்சி-டெமாக்ரடிக்" (CJP-D) என்ற மாற்றுப் பிரிவை டெல்லியில் முறைப்படி அறிவித்துள்ளார். இந்த திடீர் பிளவு ஒட்டுமொத்த அரசியல் மற்றும் மாணவர் அமைப்புகள் மத்தியில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த மணீஷ் பிரம்பட், மக்கள் மற்றும் மாணவர்களின் ரத்தமும் வியர்வையும் சிந்தி உருவான இந்த இளைஞர் இயக்கம், தற்போது ஒரு சில சுயநலவாதிகளால் ஒட்டுமொத்தமாகக் கைப்பற்றப்பட்டுவிட்டதாகக் மிகக் கடுமையாகக் குற்றம் சாட்டினார். இதன் நிறுவனர் அபிஜீத் திப்கே, இந்த அமைப்பை அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியின் (AAP) ஒரு கைக்கூலிப் படையாக மாற்றிவிட்டார் என்றும், இது வெறும் 'டீம் கெஜ்ரிவால்' (Team Kejriwal) போலச் செயல்படுவதாகவும் அவர் சாடினார்.

சிஜேபி கட்சியின் தேசிய செயற்குழுவில் இருக்கும் முக்கிய நிர்வாகிகள் 8 பேர் ஏற்கனவே ஆம் ஆத்மி கட்சியோடு நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள் என்று சுட்டிக்காட்டிய அவர், இவர்களுக்கு மாணவர்களின் பிரச்சினைகளையோ அல்லது நாட்டின் பிற மாநில மக்களின் துயரங்களையோ தீர்க்கும் எண்ணம் துளிகூட இல்லை என்று கூறினார்.

முன்னதாக கடந்த ஆகஸ்ட் மாதத்தில், கட்சியின் முக்கிய முடிவுகள் அனைத்தும் அடிமட்டத் தொண்டர்களைக் கலந்தாலோசிக்காமல் அபிஜீத் திப்கேவின் நெருங்கிய வட்டாரத்திற்குள் மட்டுமே எடுக்கப்படுவதாகக் கூறி மணீஷ் பிரம்பட் மற்றும் அவரது ஆதரவாளர் ராகுல் பாண்டியா ஆகியோர் மகாராஷ்டிராவின் சத்ரபதி சம்பாஜிநகரில் உள்ள திப்கேவின் வீட்டின் முன்பு அதிரடிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்தப் போராட்டத்தின் போது உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

டெல்லியில் பரபரப்பு! ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’ இரண்டாக உடைந்தது!