கோவில்களை பக்தர்களிடம் ஒப்படைக்கும் திட்டத்தை உங்கள் தேர்தல் அறிக்கையில் சேருங்கள் முதல்வர், எதிர்க்கட்சி தலைவருக்கு சத்குரு கடிதம்

Default Image

தமிழக கோவில்களின் நிர்வாகத்தை பக்தர்களிடம் ஒப்படைப்பதற்கான திட்டத்தை தங்களது கட்சியின் தேர்தல் அறிக்கையில் சேர்க்குமாறு முதல்வர் திரு. எடப்பாடி பழனிசாமி மற்றும் எதிர்க்கட்சி தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கு ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “முதல்வரிடமும், எதிர்கட்சி தலைவரிடமும் கோவில்களை அரசு கட்டுப்பாட்டிலிருந்து விடுவிப்பது பற்றிய அவர்களது நோக்கத்தை அறிவிக்குமாறு கோரியுள்ளேன். பல்லாண்டு கவனிப்பின்றி, பராமரிப்பின்றி இருப்பதை நாம் பார்த்துக்கொண்டு இருக்கலாகாது. சமூகத்திற்கு இது ஆன்மீக தற்கொலை” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் கடிதத்தை சத்குரு சார்பாக ஈஷா தன்னார்வலர்கள் முதல்வர் மற்றும் எதிர்க்கட்சி தலைவரிடம் நேரில் சந்தித்து அளித்தனர்.

அந்தக் கடிதத்தில் சத்குரு கூறியிருப்பதாவது:

மிகுந்த வேதனையளிக்கக் கூடிய ஒரு கடும் பிரச்சனையை தங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்: பல நூற்றாண்டுகளாய், தமிழக ஆன்மீகத்தின், தமிழ் கலாச்சாரத்தின் மையப்புள்ளியாக விளங்கும் கோவில்களின் புனிதமும் முக்கியத்துவமும் அரிக்கப்பட்டு வந்திருக்கிறது.

தமிழக கோவில்கள், ஒரே நூற்றாண்டில், துன்பகரமான தேக்கநிலையை அடைந்திருக்கின்றன. முறைகேடுகளை ஒடுக்கவும், பேராசை பிடித்த கிழக்கிந்திய கம்பெனி இயற்றிய சட்டங்களை முடக்கவும் மக்களாகிய நாமும் நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டோம். கோவில்களை அரசு கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்க சொல்லி, குரல்கள் ஒலித்து கொண்டிருக்கின்றன, தமிழ் மக்கள் மத்தியில் இதுகுறித்து அதிருப்தி நிலை வளர்ந்து வருவது பற்றி தங்களுக்கு எவ்வித ஐயமும் இருக்காது.

புறக்கணிப்பினாலும் அக்கறையற்ற நிர்வாகத்தினாலும் ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்த சில தகவல்களை தங்களது மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறோம்:

• இந்து சமய அறநிலையத் துறை(HR&CE), மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ள தகவலின்படி, 11,999 கோவில்கள் ஒரு காலப் பூஜை செய்வதற்கு கூட வருவாய் இல்லாமல் தவிக்கின்றன.
• இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள 44,121 கோவில்களில், முப்பத்தி ஏழாயிரத்திற்கும் மேற்பட்ட கோவில்களில், பூஜைப் பணிகளையும் பராமரிப்பு பணிகளையும் மேற்கொள்ள ஒரே ஒரு நபருக்கு மேல் நியமிக்க வருவாய் வரத்து இல்லை.
• 34,093 கோவில்களில், பத்தாயிரத்துக்கும் கீழ் ஆண்டு வருவாய் உள்ளதால் அவை தத்தளித்துக் கொண்டிருக்கின்றன, இதன் விளைவாக அவை புறக்கணிக்கப்படுகின்றன.

கோவில்கள் பக்தர்களின் பராமரிப்பின் கீழ் இருந்தால், சந்தேகத்திற்கு இடமில்லாமல், அவற்றை உயிரோட்டமாய், அதிர்வலையோடு வைத்திருப்பது மட்டுமல்லாமல், சுயசார்புடையதாகவும் அவர்கள் ஆக்கியிருப்பார்கள்.

இந்த அவசர சமாச்சாரத்தில், இம்மாநிலத்தின் அரசியல் தலைவர்கள், தேவையான அவசிய சீர்த்திருத்தங்களையும், கொள்கை செயல்திட்டத்தையும் உருவாக்கி, பக்தர்களின் கைகளில் தமிழக கோவில்களின் நிர்வாகத்தை ஒப்படைத்து, தமிழ் சமூகத்தில் நற்பெயரும் நம்பிக்கையும் பெற்ற மக்களை கொண்ட கமிட்டியை வெளிப்படையாக அமைக்க ஆவண செய்திட வேண்டும். இந்த நோக்கத்தையும் திட்டத்தையும் தங்களது தேர்தல் அறிக்கையில் முக்கிய அம்சமாய் குறிப்பிட்டு, உறுதியான செயலுக்கு நாட்டுமக்களுக்கு இதுகுறித்து உத்திரவாதம் அளிப்பதும் அவசியமாகிறது.

மேலும் சில முக்கிய பிரச்சனைகளுக்கும் தங்களது மேலான கவனம் இப்பொழுதில் தேவைப்படுகிறது: நமது அன்பிற்குரிய காவேரி ஆறுக்கான பணிகள் மேற்கொள்ளல், விவசாயிகளின் வருவாயை அதிகரிக்க வழிவகை செய்யும் உழவன் உற்பத்தியாளர் நிறுவனங்கள் ஏற்படுத்துதல், விவசாயி மேம்பாட்டுக்கான கொள்கை சீர்திருத்தங்களையும் ஏற்படுத்துதல், தமிழ் இளைஞர்களை வல்லமையுடைவர்களாய் ஆக்கிட உலகத்தரம் வாய்ந்த திறன் மேம்பாட்டு மையங்களை அமைத்தல், அரசு ஆதரவுடன் அனைவருக்கும் தனியார் மூலம் தரமான கல்வி வழங்குதல், வணிகம் செய்ய ஏதுவான சூழல் அமைத்து முதலீடுகளை ஈர்த்தல்.

தமிழ் மக்களின் இதயத்தில் துடித்துக் கொண்டிருக்கும் பேசப்படாத தேவைகளையும், ஆழ்ந்த அக்கறைகளையும் தங்களிடம் கொண்டு சேர்கிறேன், இந்த அழைப்பிற்கு செவிமடுத்திடுமாறு வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன். அற்புதமான நம் தமிழ் மக்களின் மென்மையான குணத்தால், தன் குரல் உயர்த்தி குற்றம் சாட்டக்கூடிய நிலைக்கு அவர்கள் செல்வதில்லை. இந்த சகிப்புத்தன்மையை நாம் அசட்டை செய்யக்கூடாது. இன்னும் சொல்லப்போனால், மக்களின் சார்பாக செயல்படுவதே தலைமைத்துவம்.

இந்த முக்கியமான சீர்திருத்தத்தை மேற்கொள்ள, தாங்கள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென வேண்டுகிறேன். போற்றுதலுக்குரிய நமது தமிழ் கலாச்சாரத்தை மீட்டெடுக்க, பலவிதங்களில், இந்நடவடிக்கை வித்தாய் அமைந்திடும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

vijay - chennai hc
Dog Bite Rabies
Nikitha
TVK Vijay
TamilagaVettriKazhagam
TVK - meeting