“வாழ்த்த மனமில்லாதவர்களின் வாழ்த்தையும் பெறும் வகையில் இரு மடங்காக உழைப்போம்” – முதல்வர் ஸ்டாலின் ..!

வாழ்த்த மனமில்லாதவர்களின் வாழ்த்தையும் பெறும் வகையில் இரு மடங்காக உழைப்பதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் நடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான அரசு மாபெரும் வெற்றியை பதிவு செய்து,தமிழகத்தில் ஆட்சியைக் கைப்பற்றி,கடந்த மே-7 ஆம் தேதியன்று மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழக முதல்வராக பொறுப்பேற்றார்.இந்த நிலையில், தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்று 100-வது நாளை இன்று எட்டியுள்ளது.
இதனால்,இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், கடந்த 100 நாட்களில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் உள்ளிட்ட அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளார்.
என் அரசல்ல உங்களில் ஒருவனின் அரசு:
அதில்,”திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அமைகிறது என்றால் அது கட்சியின் ஆட்சியாக இல்லாமல் ஓர் இனத்தின் ஆட்சியாகத்தான் எப்போதும் இருந்திருக்கிறது. இப்போதும் அப்படித்தான் அமைந்திருக்கிறது. நடந்து முடிந்த சட்டமன்றத்தேர்தலில் மகத்தான வெற்றியைப் பெற்ற திராவிட முன்னேற்றக் கழகம் அமைத்திருக்கும் ஆட்சி என்பது தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் ஆறாவது முறை அடைந்த மாபெரும் வெற்றி ஆகும்.
இது தனிப்பட்ட ஸ்டாலினின் சாதனை அல்ல மக்களின் சாதனை. உங்களுக்கு உழைக்க எனக்கு நீங்கள் உத்தரவிட்டதால் கிடைத்த பயன் .மேலும்,இது என் அரசல்ல உங்களில் ஒருவனின் அரசு. உங்களின் அரசு!” எனத் தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து, கலைஞர் கருணாநிதியின் நினைவிடத்தில், ‘100 நாள் ஆட்சி..! மக்கள் மகிழ்ச்சி..!’ என பொறிக்கப்பட்டு காய்கறிகள் மற்றும் பூக்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
இரு மடங்காக உழைப்போம்:
இந்நிலையில்,திமுக அரசின் 100-வது நாள் ஆட்சிக்கு வாழ்த்த மனமில்லாதவர்களின் வாழ்த்தையும் பெறும் வகையில் இரு மடங்காக உழைப்பதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும்,இது தொடர்பாக முதல்வர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
“வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்ற வள்ளலாரைப் போன்றது தி.மு.க. ஆட்சி என்று வரலாறு சொல்லும் அளவிற்கு செயல்படுவோம்! திமுக அரசின் 100-வது நாளுக்கு வாழ்த்திய அனைவருக்கும் நன்றி! வாழ்த்த மனமில்லாதவர்களின் வாழ்த்தையும் பெறும் வகையில் இரு மடங்காக உழைப்போம்”,என்று தெரிவித்துள்ளார்.
‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்ற வள்ளலாரைப் போன்றது தி.மு.க. ஆட்சி என்று வரலாறு சொல்லும் அளவிற்கு செயல்படுவோம்!#100DaysOfDMKGovt-க்கு வாழ்த்திய அனைவருக்கும் நன்றி!
வாழ்த்த மனமில்லாதவர்களின் வாழ்த்தையும் பெறும் வகையில் இரு மடங்காக உழைப்போம். pic.twitter.com/aGYRke8nOW
— M.K.Stalin (@mkstalin) August 14, 2021