கட்டுப்பாட்டை இழந்த கார்…விபத்தில் உயிரிழந்த திண்டுக்கல் சீனிவாசனின் பேத்தி!

சகோதரி திவ்யப்பிரியா அவர்கள் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன் என அண்ணாமலை இரங்கலை தெரிவித்துள்ளார்.

Dindigul Sreenivasan

கோவை : மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே நிகழ்ந்த பயங்கர சாலை விபத்தில், அதிமுக முன்னாள் அமைச்சரும், கட்சியின் பொருளாளருமான திண்டுக்கல் சீனிவாசனின் மகள் வழிப் பேத்தியான டாக்டர் திவ்யபிரியா (வயது 28) உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து மே 22, 2025 அன்று மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில், கல்லாறு பத்தடி பாலம் அருகே நடந்தது.

சீனிவாசனின்  பேத்தி திவ்யபிரியா, பல் மருத்துவராக பணிபுரிந்து வந்தவர். இவர் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு தனது காரில் சென்று கொண்டிருந்தார். கல்லாறு பகுதியில், கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரத்தில் இருந்த மரம் ஒன்றில் மோதியதாக கூறப்படுகிறது. இந்த விபத்து மிகவும் தீவிரமாக இருந்ததால், காரில் பயணித்த திவ்யபிரியா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த விபத்தில் மேலும் இருவர் காயமடைந்ததாகவும், அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சோக சம்பவம் குறித்து, பல அரசியல் தலைவர்கள் தங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தனது எக்ஸ் (X) பதிவில், “தமிழக முன்னாள் அமைச்சர் அண்ணன் திரு. திண்டுக்கல் சீனிவாசன் அவர்களின் பேத்தி டாக்டர் திவ்யபிரியா அவர்கள், சாலை விபத்தில் காலமானார் என்ற செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது.

இந்தக் கடினமான நேரத்தில், அண்ணன் திரு. திண்டுக்கல் சீனிவாசன் அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை. சகோதரி திவ்யப்பிரியா அவர்கள் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன். ஓம் சாந்தி!” எனக் குறிப்பிட்டு, தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்