ஜம்மு காஷ்மீரில் இன்று அதிகாலை 4.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்.!

ஜம்மு காஷ்மீரில் இன்று அதிகாலை 5.15 மணிக்கு மிதமான அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என்று தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. ஜம்முவில் இருந்து 5 கிமீ தொலைவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.1 என்ற அளவில் பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் வீடுகள் குலுங்கியதால் பதறியடித்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர். இந்த நிலநடுக்கத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தகவல்கள் ஏதும் இல்லை. ஆனால், இதுவரை அப்பகுதியில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று தான் கூறப்படுகிறது.
இந்தியாவின் வடகிழக்கு பகுதியைப் போலவே, ஜம்மு மற்றும் காஷ்மீரும் நில அதிர்வு தீவிர மண்டலத்தின் கீழ் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதனால்தான், ஜம்மு காஷ்மீரில் 20 மாவட்டங்களிலும் அதிநவீன அவசர செயல்பாட்டு மையங்களை (EOC) அமைக்க முடிவு செய்துள்ளது.