பணம், அதிகாரத்தை பயன்படுத்தி ஆட்சியை கைப்பற்ற பாஜக திட்டம்.! சித்தராமையா பேட்டி.!

பணம், அதிகாரத்தை வைத்து ஆட்சியை பிடிக்க நினைத்த பாஜக திட்டம் தோல்வி என காங்கிரஸ் முன்னாள் முதல்வர் சித்தராமையா பேட்டியளித்துள்ளார்.
நாடே எதிர்நோக்கிய கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகி கொண்டு இருக்கின்றன. இந்த தேர்தல் தென் இந்தியாவில் மக்களவை தேர்தல் ஒத்திகை போல காங்கிரஸ் மற்றும் பாஜக நினைத்து மும்முரமாக வேலை செய்து இருந்தனர் என்பது குறிப்பிட தக்கது.
இதில் ஆரம்பம் முதலே காங்கிரஸ் கட்சி கணிசமான இடங்களில் முன்னேறி தற்போது 130க்கும் அதிகமான இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. உறுதியான வெற்றி நிலவரங்களும் வெளியாகி வருகின்றன.
காங்கிரஸ் கட்சியின் வெற்றிமுகம் குறித்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் முதல்வர் சித்தராமையா கூறுகையில், இந்த தேர்தலில் பாஜக , பணம் மற்றும் அதிகாரத்தை பயன்படுத்தி ஆட்சியை தக்கவைக்க முயற்சி செய்தது. இறுதியில் அவர்கள் முயற்சி தோல்வி அடைந்தது. காங்கிரஸ் தலைவர்கள் தொண்டர்களுக்கு நன்றி. முதலமைச்சர் யார் என்பதை வெற்றிபெற்ற எம்எல்ஏக்கள் தேர்ந்தெடுத்து கட்சி மேலிடத்திடம் கூறுவார்கள். அவர்கள் யார் முதல்வர் என்பதை அறிவிப்பார்கள் என கூறினார்.
முன்னதாக இதுதான் தன்னுடைய கடைசி தேர்தல் என சித்தராமையா கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது தானும் முதல்வர் போட்டியில் இருக்கிறேன் என்பதை மறைமுகமாக கூறியுள்ளார் என்கிறது அரசியல் வட்டாரம்.