உடனுக்குடன் பிரேத பரிசோதனை! உடல்கள் அடையாளம் காணப்பட்டு ஒப்படைக்க ஏற்பாடு – ஒடிசா அரசு

ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் உடனுக்குடன் பிரேத பரிசோதனை செய்யப்படுவதாக ஒடிசா அரசு தகவல்.
ஒடிசாவில் ரயில் விபத்து சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த ரயில் பிபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுவரை, ரயில் விபத்தில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், சுமார் 900 பேர் காயமடைந்துள்ளனர்.
ஒடிசாவில் நேற்று இரவு ஒரே நேரத்தில் மூன்று ரயில்கள் விபத்துக்குள்ளாகியுள்ளது பெரும் ஏற்படுத்தியுள்ளது. 10 ஆண்டுகளுக்கு பிறகு பயங்கர ரயில் விபத்து நடந்துள்ளது. இந்த விபத்து நாட்டையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ரயில் விபத்தை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு மத்திய அதிகாரிகள், மாநில அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
இதுபோன்று, ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்கும் இன்று விபத்து நடந்த இடத்திற்கு வந்து நிலைமையை ஆய்வு செய்தார். இதன்பின், இன்று ஒரு நாள் அரசு துக்க நாளாக அறிவித்தார். உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தேசிய பேரிடர் மீட்பு படையினரும், மாவட்ட நிர்வாகமும் மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது என ஒடிசா தலைமை செயலாளர் கூறியுள்ளார்.
ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் உடனுக்குடன் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றன. பின்னர், உடல்கள் அடையாளம் காணப்பட்டு சொந்த ஊர்களுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது எனவும் தெரிவித்துள்ளார். மேலும், விபத்தில் காயமடைந்தவர்களுக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார்