சாத்தான்குளத்தில் கிணற்றில் கார் கவிழ்ந்து விபத்து…, 20 சவரன் நகைகள் மீட்பு.!
சாத்தான்குளத்தில் திருமணத்தில் கலந்துகொள்வதற்காக 7 பேர் சென்ற ஆம்னி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளான நிலையில் கிணற்றில் விழுந்த நகைகள் மீட்கப்பட்டுள்ளன.

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள ஒரு பகுதியில், நேற்று ஒரு கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக இருந்த 50 அடி ஆழமான கிணற்றில் கவிழ்ந்து விழுந்தது.
இந்த விபத்தில் காரில் பயணித்த ஐந்து பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் உள்ளூர் மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், துக்கத்தையும் ஏற்படுத்தியது. விபத்து நடந்த இடம் சாலையோரத்தில் இருந்த ஆழமான கிணறு என்பதால், மீட்புப் பணிகள் சவாலானதாக இருந்தன.
இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்த நிலையில் அவர்களது நகைகள் கிணற்றில் விழுந்ததாக கூறப்பட்டது. தூத்துக்குடியைச் சேர்ந்த முத்து குளிக்கும் மீனவர்கள் உதவியுடன், கிணற்றிலிருந்து நகைகளை மீட்கும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்து, 50 அடி ஆழ கிணற்றில் இருந்த நீர் முழுவதுமாக வெளியேற்றப்பட்டு 20 சவரன் நகைகள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இந்த விபத்தில் உயிரிழந்த ஐந்து பேரின் குடும்பங்களுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலா 3 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க உத்தரவிட்டார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அவர் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்.
இதற்கிடையில், விபத்து நடந்த இடத்தில் உள்ள கிணற்றின் உரிமையாளரிடம் காவல்துறை விசாரணை மேற்கொண்டது. மேலும், சாலையோரத்தில் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்கள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவிட்டார்.