மணிப்பூர் கலவரம்… பிரதமர் இல்லாத அனைத்துக்கட்சி கூட்டம்.! காங்கிரஸ் கடும் விமர்சனம்.!

PM Modi

மணிப்பூர் கலவரம் தொடர்பான அனைத்துக்கட்சி கூட்ட பேச்சுவார்த்தையில் பிரதமர் மோடி கலந்துகொள்ளாதது குறித்து காங்கிரஸ் கடும் விமர்சனம் செய்துள்ளது.

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மாதம் இரு பிரிவினருடைய ஏற்பட்ட கலவரமானது இன்னும் நீண்டு கொண்டிருக்கிறது. இதனால் 90க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். பல்லாயிர கணக்கானோர் காயம் அடைந்துள்ளனர். பலர் தங்கள் சொந்த வீடுகளை விட்டு அகதிகளாக பல்வேறு இடங்களில் தஞ்சம் புகுந்து உள்ளனர். இதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

ஏற்கனவே, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலவரத்தில் ஈடுபடும் இரு பிரிவினரனரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்து இருந்தார். ஆனால் அந்த பேச்சுவார்த்தை முயற்சி தோல்வியில் முடிந்தது. இதனை தொடர்ந்து வரும் 24ஆம் தேதி அனைத்து கட்சி கூட்டத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து காங்கிரஸ் கட்சி தலைவர்கள் தங்கள் விமர்சனத்தை முன் வைத்துள்ளனர்.

காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில் , மணிப்பூர் மாநிலம் 50 நாட்களாக பற்றி எரிகிறது. ஆனால் பிரதமர் அமைதியாக இருந்தார். பிரதமரே நாட்டில் இல்லாத போது அனைத்து கட்சி கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டம் பிரதமருக்கு முக்கியமில்லை என்பது தெளிவாகிறது என டிவிட் மூலம் விமர்சனம் செய்துள்ளார்.

அதே போல, காங்கிரஸ் பொதுச் செயலாளர் வேணுகோபால் தனது டுவிட்டர் பதிவில், மணிப்பூரில் கலவரம் ஏற்பட்டு 50 நாட்கள் கடந்த பிறகு உள்துறை அமைச்சர் அமித்ஷா அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். இது மிகவும் தாமதமான முடிவு. இது குறித்து பிரதமரிடம் பல்வேறு பிரதிநிதிகள் பேசுவதற்கு நேரம் கேட்டும் அவர் நேரம் ஒதுக்கவில்லை. இவ்வளவு பெரிய கலவரம் நடந்தும் இன்னும் மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தாமல் இருப்பது வேடிக்கையாக உள்ளது என விமர்சனம் செய்து இருந்தார்.

அடுத்ததாக காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய்சிங் கூறுகையில், கடந்த 50 நாட்களுக்கும் மேலாக மணிப்பூர் மாநிலம் கலவரத்தில் இருக்கும் போது பிரதமர் வெளிநாடுகளுக்கு சென்று வருகிறார் என விமர்சனம் செய்திருந்தார். மேலும் தனது டிவிட்டர் பக்கத்தில், மணிப்பூர் கலவரம் நடந்து கொண்டிருக்கும் போது பிரதமர் மோடி ஐநாவில் யோகாசனம் செய்து கொண்டிருக்கிறார். இது ரோம் நகரம் பற்றி எரியும்போது நீரோ மன்னன் பீடில் வாசித்ததை போல் உள்ளது என விமர்சனம் செய்து இருந்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்