ஒடிசா ரயில் விபத்து..! தென்கிழக்கு ரயில்வேயின் 5 மூத்த அதிகாரிகள் இடமாற்றம்..!

தென்கிழக்கு ரயில்வேயின் 5 மூத்த அதிகாரிகளை இந்திய ரயில்வே இடமாற்றம் செய்துள்ளது.
கடந்த ஜூன் 2ம் தேதி ஒடிசாவில் பால்சோர் மாவட்டத்தில் பாஹாநாகா ரயில் நிலையம் அருகே கோரமண்டல் எக்ஸ்பிரஸ் உட்பட மூன்று ரயில்கள் மோதிய விபத்தில் 288 பேர் உயிரிழந்தனர் மற்றும் 1000க்கும் மேற்பட்டோர் இந்த விபத்தில் காயமடைந்தனர்.
இந்த விபத்துக்குறித்து பலவித சந்தேகங்கள் ஏற்பட்ட நிலையில், இந்த வழக்கு விசாரணை சிபிஐ ஒப்படைக்கப்பட்டது. இது தொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்து சம்பவம் நடந்த பாலசோர் மாவட்டம் பஹானகா ரயில் நிலையத்தில் விசாரணையை தொடங்கியது.
இதில் முதற்கட்ட விசாரணையில் கணினி மூலம் இயங்கும் இந்த இண்டர்லாக்கிங் அமைப்பை, பராமரிப்பு பணிகள் காரணமாக ரயில் நிலைய அதிகாரி அணைத்துவிட்டு, கிரீன் சிக்னல் கொடுத்ததால் இந்த பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது என்று என்று சிபிஐ தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நடந்து சில வாரங்களுக்குப் பிறகு தென்கிழக்கு ரயில்வேயின் ஐந்து மூத்த அதிகாரிகளை இந்திய ரயில்வே இடமாற்றம் செய்துள்ளது.
அதன்படி, இந்திய ரயில்வே அமைச்சகம் தென்கிழக்கு ரயில்வேயின் ( SER ) முதன்மை தலைமை சமிக்ஞை மற்றும் தொலைத்தொடர்பு பொறியாளர் (PCST), முதன்மை தலைமை பாதுகாப்பு அதிகாரி (PCSO) மற்றும் காரக்பூரின் கோட்ட ரயில்வே மேலாளர் (DRM) உட்பட ஐந்து மூத்த அதிகாரிகளை இடமாற்றம் செய்துள்ளது. இடமாற்ற உத்தரவுகளில் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டதற்கான எந்த காரணமும் குறிப்பிடப்படவில்லை.