டெல்லியை உலகத் தரம் வாய்ந்த நகரமாக மாற்றுவேன் என்று கெஜ்ரிவால் உறுதியளித்தார்..! கவுதம் கம்பீர்

டெல்லியை உலகத் தரம் வாய்ந்த நகரமாக மாற்றுவேன் என்று முதல்வர் உறுதியளித்தார் என்று பாஜக எம்பி கவுதம் கம்பீர் கூறியுள்ளார்.
கடந்த சில நாட்களாக வடமேற்கு இந்தியாவில் சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்து வருகிறது. இந்த மழையினால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும்பாலான இடங்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. இதில் டெல்லியில் உள்ள யமுனை நதி நீர்மட்டம் 208.48 மீட்டரை எட்டியதாக மத்திய நீர் ஆணையம் தெரிவித்துள்ளது.
கனமழை மற்றும் ஹத்னிகுண்ட் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதைத் தொடர்ந்து யமுனை நதியின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் நகரின் பல பகுதிகள் வெள்ளம் சூழ்ந்துள்ளது. அதிலும் உச்சநீதிமன்ற வளாகம் வரை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், டெல்லியில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெல்லி காவல்துறை 144 தடையையும் விதித்துள்ளது. டெல்லி அரசின் வெளியேற்றத் திட்டத்தின் ஒரு பகுதியாக, தாழ்வான பகுதிகளில் வசிக்கும் 16,564 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், வெள்ளம் குறித்து கூறிய கிழக்கு டெல்லி பாஜக எம்பி கவுதம் கம்பீர், டெல்லி வெள்ளத்தில் மூழ்கியதில் ஆச்சரியமில்லை. ஏனெனில் ஒன்பது ஆண்டுகால இலவச அரசியலின் விளைவாக இது நடக்கும். இலவச அரசியலில் ஈடுபட்டு டெல்லியின் உள்கட்டமைப்புக்கு 1 ரூபாய் கூட செலவழிக்கவில்லை என்று கூறினார்.
மேலும், டெல்லி உலகத் தரம் வாய்ந்த பாரிஸ் நகரம் போல மாற்றுவேன் என்று கெஜ்ரிவால் பல வாக்குறுதிகளை அளித்தார். ஆனால், எனது தொகுதி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு அனைவரின் நிலையைப் பாருங்கள். மக்கள் தண்ணீர் மற்றும் உணவு இல்லாமல் இரண்டு நாட்களாகத் தவித்தனர் என்று கெளதம் கம்பீர் கூறினார்.