நயினார் நாகேந்திரன் மகனின் ரூ.100 கோடி மதிப்பிலான பத்திரப்பதிவு ரத்து!

பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் மகன் நயினார் பாலாஜி செய்த மோசடி பத்திரப்பதிவு ரத்து.
நெல்லையில் பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் மகன் நயினார் பாலாஜியின் ரூ.100 கோடி மதிப்பிலான பத்திரப்பதிவு ரத்து செய்யப்பட்டது. ராதாபுரம் சார் பதிவாளர் அலுவலகத்தில் மோசடியாக பதிவு செய்யப்பட்ட ரூ.100 கோடி மதிப்பிலான நயினார் பாலாஜியின் பத்திரப்பதிவை ரத்து செய்து நெல்லை மண்டல துணை பத்திரப்பதிவு துறைத் தலைவர் உத்தரவிட்டார்.
பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரனின் மகன் ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தை மோசடி செய்து பதிவு செய்ததாக புகார் எழுந்துள்ளது. ஸ்ரீநயினார் பாலாஜி மோசடியாகப் பத்திரப்பதிவு செய்துள்ளதாக அறப்போர் இயக்கம் குற்றம் சாட்டியிருந்த நிலையில், அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மதுரையை சேர்ந்த இளையராஜா என்பவர் நயினார் பாலாஜியுடன் இணைந்து மிகப்பெரிய பத்திரப்பதிவு மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. விருகம்பாக்கத்தில் உள்ள 1.3 ஏக்கர் நிலத்தை மோசடியாக சம்பந்தமே இல்லாத ராதாபுரம் சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்ததாகவும், ராதாபுரம் அருகே உள்ள உதயத்தூரில் உள்ள சில சொத்துக்களை சேர்த்து பத்திரப்பதிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனை ராதாபுரம் சார்பதிவாளராக இருந்த சரவணா மாரியப்பன் பதிவு செய்துள்ளார். எனவே, நயினார் பாலாஜி மீதான மோசடி புகார் குறித்து 15 நாட்களில் நடவடிக்கை எடுக்க அமைச்சர் மூர்த்தி உத்தரவு பிறப்பித்திருந்தார். அமைச்சர் உத்தரவின் பேரில், நயினார் பாலாஜி செய்த ரூ.100 கோடி மதிப்பிலான மோசடி பத்திரப்பதிவு ரத்து செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.