வாரிசுகளால் தமிழகம் வளர்கிறது – எம்.ஐ.டி பவள விழாவில் முதலமைச்சர் உரை!

மெட்ராஸ் தொழில்நுட்பக் கல்லூரி பவள விழாவில், கல்லூரியை மேம்படுத்த சில புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர்.
சென்னை குரோம்பேட்டை மெட்ராஸ் தொழில்நுட்பக் கல்லூரி பவள விழாவினை தொடங்கி வைத்த பின் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வாரிசுகளால் தமிழகத்தில் ஏராளமான இளைஞர்கள் கல்வி அறிவு பெற்றுள்ளனர். நான் அரசியல் பேசுவதாக யாரும் நினைக்க வேண்டாம், வாரிசுகள் நினைத்தால் ஒரு தலைமுறைக்கு மட்டுமல்ல.. 3,4,5 என பல தலைமுறைக்கு சேவையாற்ற முடியும்.
இந்தியாவின் தலைசிறந்த கல்வி நிறுவனமான எம்ஐடி திகழ்கிறது. தமிழக மாணவர்கள் கல்வியில் மட்டுமின்றி அறிவாற்றலிலும் முதலிடத்தை பெற வேண்டும். அனைவருக்கும் உயர்கல்வி, ஆராய்ச்சி கல்வி வழங்குவதே எங்கள் அரசின் நோக்கம். பள்ளிக்கு, கல்லூரிக்கு செல்லாதவர்களையும் பள்ளி, கல்லூரிக்கு அழைத்து வருவதே அரசின் நோக்கம். பன்முக ஆற்றல் கொண்ட மாணவர்களை உருவாக்க வேண்டும் என்பதற்காகவே நான் முதல்வன் திட்டம். தமிழகத்தில் கல்வித்தரத்தை மேம்படுத்த, மாணவர்களின் வசதிக்காக பல திட்டங்களை அரசு வகுத்துள்ளது.
அரசுப்பள்ளியில் பயின்ற பெண் பிள்ளைகளுக்காகவே புதுமை திட்டம். இந்தியாவின் முன்னணி கல்வி நிறுவனங்கள் பட்டியலில், தமிழ்நாட்டின் எம்.ஐ.டி இடம் பெறுவது தமிழ்நாட்டிற்கு கிடைக்கக்கூடிய பெருமை. இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கிய முன்னாள் குடியரசுத் தலைவர் ‘ஏவுகணை மனிதர்’ என்று போற்றப்படும் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் படித்த கல்லூரி என்பதை விட வேறு பெருமை தேவையில்லை எனவும் தெரிவித்தார்.
மேலும், மெட்ராஸ் தொழில்நுட்பக் கல்லூரி பவள விழாவில், கல்லூரியை மேம்படுத்த சில புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அதி நவீன உள்விளையாட்டு அரங்கத்தோடு இணைந்த கலையரங்கம் கட்டுவதற்கு ரூ.50 கோடி ஒதுக்கீடு. கற்றல்வளாகம் மற்றும் பவளவிழா பூங்கா அமைக்க ரூ.25 கோடி ஒதுக்கீடு. குரோம்பேட்டையில் எம்ஐடி வளாகத்தில் 1,000 பேர் அமரும் வகையில் ஏசி வசதியுடன் மிகப்பெரிய அரங்கம் அமைக்கப்படும் என அறிவித்தார் முதல்வர்.