என்.எல்.சி நிலம் கையகப்படுத்தலில் பயிர்களை அழித்ததற்கு உயர்நீதிமன்றம் வருத்தம்.!

நெய்வேலியில் என்.எல்.சிக்காக நிலம் கையகப்படுத்தும் போது, பயிர்களை புல்டோசர் கொண்டு அழித்ததற்கு உயர்நீதிமன்றம் கேள்வி.
நெய்வேலியில் என்.எல்.சி தொழிற்சாலையில் இரண்டாவது சுரங்க விரிவாக்க பணி தொடர்பாக கால்வாய் தோண்டும் பணிகளும் நடைபெற்று வந்தது. மேலும் இன்று தொழிற்சங்கம் சார்பில் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி போராட்டங்களும் நடைபெற்றது, இது தொடர்பாக என்.எல்.சி பணியாளர்களுக்கு பாதுகாப்பு அளிப்பது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் நீதிபதி தண்டபாணி முன் விசாரணைக்கு வந்த நிலையில், போராட்டம் கட்டுப்படுத்தப்பட்டதாகவும், பணியாளர்கள் வேலைக்கு செல்வதில் எந்த பிரச்சனையும் இல்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டதால், வழக்கில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என ஆகஸ்ட் 3 க்கு ஒத்திவைத்துள்ளார்.
மேலும் நிலம் கையகப்படுத்தும் போது கால்வாய் தோண்டும் வீடியோ தொடர்பாக இதனை பார்த்த நான் கண்கலங்கிவிட்டேன், பயிர்களை புல்டோசர் மூலம் அழிப்பது தொடர்பான வீடியோ வெளியானது. இதனை கண்டித்து பேசிய நீதிபதி பயிர்களை அழித்து நிலக்கரி எடுத்தால், வருங்காலத்தில் நிலக்கரி கிடைக்கும் ஆனால் சாப்பிட அரிசி கிடைக்காது என்று நீதிபதி வருத்தத்துடன் தெரிவித்தார்.
20 வருடங்களுக்கு முன் நிலம் கையகப்படுத்த அனுமதி பெறப்பட்டதாகவும், நிலத்தின் மூன்று மடங்கு இழப்பீடு கொடுக்கப்பட்டதாகவும் என்.எல்.சி தரப்பில் கூறப்பட்டது. இதற்கு நீதிபதி, 20 வருடங்கள் பொறுத்துக்கொண்டு உங்களுக்கு பயிர் அறுவடைக்காக 2 மாதங்கள் காத்திருக்க முடியாதா என கேள்வி எழுப்பினார்.
வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடியதாக பாடிய வள்ளலாரின் ஊரில் இப்படி நடைபெறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என நீதிபதி கடுமையாக தனது கருத்தை வெளிப்படுத்தி, வழக்கின் விசாரணையும் தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளார்.