ஷாக்! கர்நாடகாவில் இன்று முதல் உயர்ந்த பால் பொருட்களின் விலை!

கர்நாடகாவில் கர்நாடக பால் கூட்டமைப்பு சார்பில், இயங்கி வரும் பிரபல நந்தினி நிறுவனத்தின் பால், தயிர் மற்றும் மோர் ஆகியவற்றின் விலை ஆகஸ்ட் 1 (அதாவது) இன்று முதல் உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று முதல் கர்நாடக மாநிலத்தில் பல்வேறு வகையான பால் பொருட்களின் விலைகள் லிட்டருக்கு ரூ.3 உயந்து விற்கப்படுவதால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
அண்மையில், பால் கூட்டமைப்பு சங்கங்களின் கோரிக்கையை ஏற்று முதல்வர் சித்தராமையா ஒப்புதல் அளித்து, அரசாணை வெளியிட்டார். அமைச்சரவையும் சில நாட்களுக்கு முன் இந்த முன்மொழிவுக்கு ஒப்புதல் அளித்தது குறிப்பிடத்தக்கது.
இதனால், நந்தினி பால் உற்பத்தியின் புதிய விலையின் படி, 39 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த, டோன்டு பால் (ப்ளூ பாக்கெட்) இப்போது 42 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. மேலும், 40 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரே மாதிரியான டோன்ட் பால் இப்போது 43 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
பசும்பால் (பச்சை பாக்கெட்) விலை ரூ.43ல் இருந்து ரூ.46 ஆக உயர்ந்துள்ளது. சுபம் (ஆரஞ்சு பாக்கெட்) 45 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஸ்பெஷல் பால் பாக்கெட் இப்போது 48 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு லிட்டர் தயிர் விலை ரூ.47ல் இருந்து ரூ.50 ஆக உயர்ந்துள்ளது. 8 ரூபாய்க்கு விற்கப்பட்ட மோர் (200 மில்லி பாக்கெட்) இப்போது 9 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.