டெல்லி நிர்வாக மசோதா.. மக்களாட்சியின் கறுப்பு நாள்.! முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்.!

Tamilnadu CM MK Stalin

டெல்லியில் ஐஏஎஸ் , ஐபிஎஸ் அதிகாரிகளை நியமிக்கும் நிர்வாக நடைமுறையில் மாநில அரசை விட மத்திய அரசுக்கு தான் அதிகாரம் என்கிற வகையில் டெல்லி நிர்வாக மசோதாவானது மக்களவையை தொடர்ந்து நேற்று மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது.

டெல்லி நிர்வாக மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டங்களை பதிவு செய்து வருகின்றனர். இது மாநில அரசின் உரிமைகளை மத்திய அரசு பறிக்கும் செயல் என விமர்சித்து வருகின்றனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் தனது கண்டனத்தை டிவிட்டர் வாயிலாக பதிவு செய்துள்ளார். அதில், தலைநகர் டெல்லியை ஒரு மாநகராட்சியைப் போலத் தரம் குறைக்கும் டெல்லி நிர்வாக மசோதா மாநிலங்களவையில் நிறைவேறிய நேற்றைய நாள், மக்களாட்சியின் கறுப்பு நாள் என பதிவிட்டுள்ளார். 

எதிர்க்கட்சி ஆட்சி செய்தால் அந்த மாநிலத்தைக் கூடச் சிதைப்போம் என்ற பாஜகவின் பாசிசம் அரங்கேறிய நாளை வேறு எப்படி சொல்வது? 29 வாக்குகள் வித்தியாசத்தில் ஒரு நாட்டின் தலைநகரையே தரைமட்டத்துக்குக் குறைத்த சதிச் செயலுக்கான தண்டனையை டெல்லி மாநில மக்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்திய மக்களும் விரைவில் தருவார்கள் என வரும் நாடாளுமன்ற தேர்தலை குறிப்பிட்டு கூறினார். 

மூன்று மாதமாக மணிப்பூர் எரிகிறது. அதை அணைக்க முடியாமல் , டெல்லியைச் சிதைக்கத் துடிக்கும் பா.ஜ.க.வின் தந்திரங்களை மக்கள் நன்கு உணர்ந்துள்ளார்கள். மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் மாநில முதலமைச்சரின் அதிகாரத்தைக் குலைக்கும் இந்த மசோதாவை, பேரறிஞர் அண்ணாவின் பெயரால் கட்சி நடத்தும் அடிமைக் கூட்டம் ஆதரித்து மாநிலங்களவையில் வாக்களித்திருப்பது எனக்கு அதிர்ச்சியளிக்கவில்லை என டெல்லி மசோதாவுக்கு ஆதரவாக அதிமுக வாக்களித்தது குறித்து பதிவிட்டார். 

“நான் யாருக்கும் அடிமையில்லை” என்றபடியே, பா.ஜ.க.வின் பாதம் தாங்கி, “கொத்தடிமையாக” தரையில் ஊர்ந்து கொண்டிருக்கிறார் பழனிசாமி என்பதையே இது வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. என தனது டிவிட்டர் பக்கத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்