அரவிந்த் கெஜ்ரிவால் போல முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்பட்டிருக்க வேண்டும்.! இபிஎஸ் விமர்சனம்.!

இன்று சேலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்கள் மத்தியில் பேசுகையில், நாங்குநேரியில் மாணவர் மீது சக மாணவர்கள் நடத்திய சாதிய வன்முறை, காவேரி நதிநீர் பங்கீடு பிரச்சனை, நீட் விலக்கு மசோதா உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து தனது கருத்துக்களை குறிப்பிட்டு பேசினார்.
அவர் கூறுகையில், இளம் வயதிலேயே கல்வி கூடங்களில் ஜாதி சண்டை உருவாகி இருப்பது வருத்தம் தருகிறது. சாதீய வன்முறையில் மாணவர்கள் தாக்கப்பட்டது வருத்தமும் வேதனையும் அளிக்கிறது. திமுக ஆட்சியில் நடைபெற்ற இந்த வன்முறை சம்பவத்தை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம் என்று தெரிவித்தார்.
காவேரி விவகாரத்தில் அதிமுக ஆட்சியிலேயே நிரந்தர தீர்ப்பை பெற்றுள்ளோம். ஒவ்வொரு மாதமும் எவ்வளவு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என அந்த உச்சநீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்டு இருக்கும். அதனை வைத்து தண்ணீர் பெற்று தரவேண்டும். ஒரு முறை திறந்துவிட்டால் போதும் என இருக்க கூடாது. குருவை சாகுபடி முடியும் வரையில் தண்ணீர் திறந்துவிட வேண்டும்.
டெல்லி முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால், இந்தியா கூட்டணியில் இணையும் போது, ஒரு கண்டிஷன் முன் வைக்கிறார். அதில், டெல்லி நிர்வாக மசோதாவுக்கு எதிராக எதிர்க்கட்சியினர் வாக்களித்தால் கூட்டணிக்கு வருகிறேன் என கூறினார்கள். அதே போல எதிர்க்கட்சியினர் மசோதாவுக்கு எதிராக வாக்களித்தனர். அரவிந்த் கேஜ்ரிவாலும் கூட்டணியில் தொடர்ந்து வருகிறார்.
அதே போல திமுகவும், காங்கிரஸ் உடன் கூட்டணி வைக்கும் போதே, அரவிந்த் கெஜ்ரிவால் போல, கோரிக்கை வைத்து இருக்க வேண்டும். கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி தான் நடைபெறுகிறது. கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் டி.கே.சிவகுமார் தான் பெங்களூருவில் முதல்வர் மு.க.ஸ்டாலினை வரவேற்கிறார். அப்போது கர்நாடக முதல்வர் சித்தராமையாவும் அங்கு தான் இருக்கிறார். காவேரி விவகாரம் குறித்து அங்கேயே கேட்பதை விடுத்து எதற்காக மத்திய அமைச்சருக்கும், பிரதமர் மோடிக்கும் கடிதம் எழுதுகிறார். என காவேரி விவகாரம் குறித்து தனது கருத்தை முன்வைத்தார்.
அடுத்து நீட் தேர்வு பற்றி பேசுகையில், நீட் தேர்வு தடை மசோதா, ஆட்சிக்கு பொறுப்பேற்ற உடன் முதல் நாள் முதல் கையெழுத்து என தேர்தல் பிரச்சாரம் செய்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். ஆனால் தற்போது மசோதா அனுப்பியுள்ளளோம். இன்னும் மத்திய அரசு ஒப்புதல் அளிக்கவில்லை என கூறி வருகிறார். என நீட் தேர்வு பற்றியும் தனது கருத்தை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்வைத்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
ஈரான் கொடுத்த கொலை மிரட்டல்? டிரம்ப் சொன்ன பதில்!
July 10, 2025