பஹல்காம் தாக்குதல் சம்பவம்…பாகிஸ்தானுக்கு எதிராக மத்திய அரசு எடுத்த முக்கிய முடிவுகள்?
பாகிஸ்தானியர் இந்தியா வருவதற்கான விசா தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பஹல்காம் : தீவிரவாதத் தாக்குதலையடுத்து, ஏப்ரல் 23 அன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாதுகாப்பு குறித்து அமைச்சரவைக் குழு கூட்டம் அவருடைய இல்லத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டார்கள்.
இந்த கூட்டத்தில் மக்களின் பாதுகாப்புக்காக பாகிஸ்தானுக்கு எதிராக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அது பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
அட்டாரி-வாகா எல்லை மூடல்
இந்தியாவும் பாகிஸ்தானும் எல்லையில் உள்ள அட்டாரி-வாகா என்ற இடத்தில் வர்த்தகமும் மக்கள் நடமாட்டமும் நடக்கும். இந்த எல்லையை முழுவதுமாக மூடிவிடுவது என்று முடிவு செய்தார்கள். பாகிஸ்தான் தீவிரவாதத்தை ஆதரிப்பதால், அவர்களுடன் வர்த்தகம், பயணம் போன்றவற்றை நிறுத்தி, அவர்களுக்கு அழுத்தம் கொடுக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானியர்கள் வெளியேற உத்தரவு
இந்தியாவில் இருக்கும் பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்தில் இந்தியாவை விட்டு வெளியேற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.அதைப்போல, பாகிஸ்தான் தூதரகத்தின் இராணுவ, கடற்படை, விமானப்படை ஆலோசகர்கள் வெளியேற்றப்படுகின்றனர்.
விசா ரத்து
பாகிஸ்தானியருக்கு இந்திய விசா வழங்குவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியரின் விசாக்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டன. இது தீவிரவாதம், உளவு போன்ற அச்சுறுத்தல்களைத் தடுக்க உதவும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்திய தூதரகம் மூடப்படும்
அதைப்போல, இந்த தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகம் மூடப்படும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், புது தில்லியில் உள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தின் இராணுவ, கடற்படை, விமானப்படை ஆலோசகர்கள் வெளியேற்றப்படுகின்றனர்.
சிந்து நதி ஒப்பந்தம் நிறுத்தம்
இந்தியா-பாகிஸ்தான் இடையேயான சிந்து நதி ஒப்பந்தம் நிறுத்தம் செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 1960 இந்தஸ் நீர் ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது, முழுமையாக ரத்து செய்யப்படவில்லை.
தீவிரவாதத் தாக்குதலையடுத்து மேற்கண்ட நடவடிக்கைகளை தான் மோடி தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டதில் மத்திய அரசு எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.