அமெரிக்காவுக்கு என்ன வேலை? போர் நிறுத்தியது தவறு…சுப்பிரமணியன் சுவாமி பேச்சு!
அமெரிக்காவின் சமாதானத்தை பிரதமர் மோடி ஏற்றது தவறு என சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி ரெசிஸ்டன்ட் ப்ரண்ட்’ (லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பு) பெரும்பாலும் சுற்றுலாப் பயணிகளை குறி வைத்து நடத்திய தாக்குதலில் பரிதாபமாக 26 பேர் உயிரிழந்தனர்.
இந்தத் தாக்குதல், இந்தியாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது அத்துடன் பாகிஸ்தானுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுவாக எழுந்தது. எனவே, இந்தியா தகுந்த பதிலடி கொடுத்து போரை தொடங்கியது உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த போர் எப்போது முடியும் என இரண்டு நாட்டு மக்களுக்கு பதற்றத்தில் இருந்த சூழலில், நேற்று போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அறிவிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அனைத்துமட்ட ஆலோசனை குழுக்கூட்டத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே நடந்த போர் குறித்து சில விஷயங்கள் பேசப்பட்டதுடன் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய ராணுவத்திற்கு முழு அதிகாரம் வழங்கி உத்தரவும்விட்டிருந்தது. போர் நிறுத்தப்பட்டாலும் அரசியல் தலைவர்கள் பலரும் இது குறித்து பேசி வருகிறார்கள்.
அந்த வகையில், பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் சண்டையை நிறுத்தியது தவறு என கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பேசுகையில் ” எனக்கு ஒரே ஒரு கேள்வி இருக்கிறது அமெரிக்காவுக்கு இந்தியாவில் என்ன வேலை?எதற்காக பஹல்காமில் 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டபோது அமெரிக்கா வந்திருக்க வேண்டும் அப்படி வந்த பிறகு போர் தொடங்கிய 2 நாட்களில் சமாதானம் ஏன் செய்தது?
என்னை பொறுத்தவரை போர் தொடங்கிய 2 நாட்களில் அமெரிக்கா சமாதானம் செய்ததை இந்தியா ஏற்றிருக்கக் கூடாது. அமெரிக்காவின் சமாதானத்தை பிரதமர் மோடி ஏற்றது தவறு தான்” எனவும் பேசியுள்ளார். வெளிப்படையாக இவர் இந்தியா vs பாகிஸ்தான் விவகாரத்தில் தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளது தற்போது ஹாட் டாப்பிக்காகவும் மாறியுள்ளது.