தேசத்தில் அழிக்கும் கட்சி ஒன்று இருக்கிறதென்றால் அது பாஜக! செல்வப்பெருந்தகை விமர்சனம்!
இந்த தேசத்தை அழிக்கும் ஒரு கட்சி இருக்கிறது என்றால் அது பாஜகதான் என சென்னையில் காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை பேட்டி கொடுத்துள்ளார்.

சென்னை : சமீபத்தில் கோவையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய சிவகங்கை தொகுதி கார்த்தி சிதம்பரம் எம்.பி.காங்கிரஸ் கட்சிக்கும் வாய்ப்பு கிடைத்தால் ஆட்சி, அதிகாரத்தில் பங்கேற்க வேண்டும் என்றுதான் விரும்புகிறோம். எங்களுடைய பலம் என்ன என்பதை அறிந்துதான் சீட் கேக்க முடியும் என பேசியிருந்தார்.
இதனையடுத்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு. செல்வப்பெருந்தகை, சென்னையில் 2025 மே 20 அன்று அளித்த பேட்டியில், “இந்த தேசத்தை அழிக்கும் ஒரு கட்சி இருக்கிறது என்றால் அது பாஜகதான்” என்று கூறி, பாஜகவிற்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்தததுடன் கார்த்தி சிதம்பரம் வைத்த கருத்திற்கு பதில் அளித்தும் பேசியிருக்கிறார்.
இது குறித்து பேசிய அவர் ” அதெல்லாம் முடிவு செய்வது எங்களுடைய காங்கிரஸ் கட்சி தான். கார்த்தி சிதம்பரம் அவருடைய கருத்தை அவருடைய விருப்பத்தை தெரிவித்திருக்கிறார். அது அவருடைய தனிப்பட்ட கருத்து தான் கட்சியுடைய கருத்து இல்லை. எனவே, கட்சி தான் முடிவு எடுக்கும்” என செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய செல்வப்பெருந்தகை ” எங்களுடைய கட்சியில் இருக்கும் தலைவர்கள் யாரும் பாஜகவை உயர்த்தி பிடிக்கும் தலைவர்கள் இல்லை. இந்த தேசத்தை அழிக்கும் ஒரு கட்சி இருக்கிறது என்றால் அது பாஜகதான். இது ஒரு பாசிச ஆட்சி. அந்த மாதிரி ஆட்சிக்கு யாரும் பாசிட்டிவாக பேசுவதற்கு வாய்ப்புகள் இல்லை. இது தான் என்னுடைய பார்வை என்னுடைய கருத்து” எனவும் செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.