என்கவுன்ட்டரில் கொல்லப்பட்ட மாவோயிஸ்ட் தலைவர் பசவராஜு! நடந்தது என்ன?
சத்தீஸ்கர் மாநிலத்தில் 27 நக்சலைட்கள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

சத்தீஸ்கர்: மாநிலத்தில் மாவோயிஸ்ட் இயக்கத்தின் முக்கிய தலைவர் நம்பல கேசவ் ராவ் என்ற பசவராஜு உட்பட 27 மாவோயிஸ்டுகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம், இந்தியாவில் நக்சல் இயக்கத்திற்கு எதிரான போரில் முக்கிய திருப்புமுனையாக கருதப்படுகிறது. இந்த சம்பவம் 2025 மே 21 அன்று சத்தீஸ்கரின் நாராயண்பூர் மற்றும் பிஜாப்பூர் மாவட்டங்களுக்கு இடையேயான அபுஜ்மத் வனப்பகுதியில் நடைபெற்றது. இந்த நடவடிக்கை “ஆபரேஷன் பிளாக் ஃபாரஸ்ட்” என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்டது.
சத்தீஸ்கர் மாநிலத்தின் நாராயண்பூர்-பிஜாப்பூர் எல்லையில் உள்ள அபுஜ்மத் வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, மாவட்ட ரிசர்வ் காவல் படை (DRG), மத்திய ரிசர்வ் காவல் படை (CRPF) மற்றும் சிறப்பு அதிரடிப்படை ஆகியவை இணைந்து கூட்டு நடவடிக்கையை மேற்கொண்டன. இந்த தேடுதல் வேட்டையில், பாதுகாப்பு படையினருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே கடுமையான சண்டை ஏற்பட்டது.
இந்த மோதலில்,பசவராஜு உட்பட 27 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர். மோதல் நடந்த இடத்தில் பெரிய அளவிலான நவீன ஆயுதங்கள், வெடிமருந்துகள் மற்றும் பிற போர்ப் பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர். இந்த நடவடிக்கையில் ஒரு துணை ராணுவ வீரர் காயமடைந்தார், ஆனால் பாதுகாப்பு படையினர் தரப்பில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
யார் இந்த பசவராஜு ?
நம்பல கேசவ் ராவ் என்ற பசவராஜு, ஆந்திரப் பிரதேசத்தின் வாராங்கல் பொறியியல் கல்லூரியில் பி.டெக் பட்டம் பெற்றவர். இவர் 1980களின் இறுதியில் இலங்கையின் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் (LTTE) கீழ் ராணுவ பயிற்சி பெற்றவர் என்று கூறப்படுகிறது. 1992ஆம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) மக்கள் போர் அமைப்பின் மத்தியக் குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்
பின்னர், மாவோயிஸ்ட் இயக்கத்தின் மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவராக பணியாற்றிய இவர், வெடிகுண்டுகள் மற்றும் கண்ணிவெடிகளை கையாளுவதில் நிபுணராக கருதப்பட்டார். 2004ஆம் ஆண்டு மாவோயிஸ்ட் இயக்கத்தின் பொதுச் செயலாளராக பதவி உயர்வு பெற்றார்.இவர் பல மாவோயிஸ்ட் தாக்குதல்களுக்கு தலைமை தாங்கியவர் என்று குற்றச்சாட்டு எழுந்த நிலையில், நாராயண்பூர் மாவட்டம் அபுஜ்மத் காடுகளில் நடத்தப்பட்ட என்கவுன்டர் ஆபரேஷனில் சுட்டுக்கொல்லப்பட்டார்.