இந்துக்கள் என்னை தங்கள் உடன்பிறப்பாகவே கருதுகிறார்கள் -மு.க.ஸ்டாலின் பேச்சு!
இந்துக்கள் என்னை தங்கள் உடன்பிறப்பாகவே நினைக்கிறார்கள் அதனால் தான் வெற்றிபெறுகிறோம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக (திமுக) அரசு, தமிழ்நாட்டில் தனது ஆட்சியின் ஐந்தாவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்நிலையில், ‘தி வீக்’ ஆங்கில இதழுக்கு அளித்த சிறப்பு நேர்காணலில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டின் ஆட்சி, பொருளாதாரம், மற்றும் அரசியல் சூழல் குறித்தும் மோடி குறித்தும் பல முக்கிய விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார்.
பிரதமர் நரேந்திர மோடி குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “பிரதமர் மோடி அரசியல் நுணுக்கங்களை நன்கு அறிந்தவர். அவர் திருக்குறளை உரைகளில் மேற்கோள் காட்டினாலும், அவரது இயக்கமும், சித்தாந்தமும் தமிழ்நாட்டின் மரபுகளுக்கும், தமிழர்களின் உணர்வுகளுக்கும் எதிராக உள்ளன. இதனால், தமிழக மக்கள் தொடர்ந்து மோடியைப் புறக்கணித்து வருகின்றனர்” என்று கூறினார்.
அதனைத்தொடர்ந்து, மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்கீட்டில் பாகுபாடு காட்டுவதாகக் குற்றம்சாட்டப்படும் நிலையில், இதை எவ்வாறு எதிர்கொள்வீர்கள் என்ற கேள்விக்கு, ஸ்டாலின், “மத்திய அரசின் பாரபட்சமான அணுகுமுறையை மக்கள் முன் தெளிவாக எடுத்துரைத்து வருகிறோம். சட்டரீதியான வழிமுறைகள் மூலம் இதற்கு தீர்வு காண முயல்கிறோம். தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் நாங்கள் முழு நம்பிக்கை கொண்டுள்ளோம்” என தெரிவித்தார்.
மேலும் தொடர்ந்து பேசுகையில் இந்துக்கள் என்னை தங்கள் உடன்பிறப்பாகவே கருதுகிறார்கள் எனவும் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” இந்துக்கள் என்னை தங்கள் உடன்பிறப்பாகவே கருதுகின்றனர். அனைத்து சமூக மக்களும் என் மீது அன்பு செலுத்துகின்றனர். திமுக ஆட்சியில், இந்து கோயில்கள் புத்துயிர் பெற்று வருகின்றன. பக்தர்களின் நம்பிக்கைகளை மதிப்பதால், மக்கள் திமுகவுக்கு தொடர்ந்து ஆதரவளிக்கின்றனர்” எனவும் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.