INDvsENG : இங்க பவுலிங்கில் நான் தான் கிங்! புதிய சாதனை படைத்த பும்ரா!
SENA நாடுகளில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய ஆசிய பந்துவீச்சாளராக வாசிம் அக்ரம் சாதனையை பும்ரா முறியடித்தார்.

லீட்ஸ் : இந்தியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா, இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் SENA நாடுகளில் (தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா) அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய ஆசிய பந்துவீச்சாளர் என்ற பாகிஸ்தான் முன்னாள் வீரர் வாசிம் அக்ரமின் சாதனையை முறியடித்து வரலாறு படைத்தார்.
லீட்ஸ் ஹெடிங்லி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியின் இரண்டாம் நாளில், பும்ரா, இங்கிலாந்து தொடக்க ஆட்டக்காரர் சாக் க்ராலி மற்றும் பென் டக்எட் ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தி, SENA நாடுகளில் தனது விக்கெட் எண்ணிக்கையை 147 ஆக உயர்த்தினார், இதன் மூலம் வாசிம் அக்ரமின் 146 விக்கெட்டுகள் என்ற சாதனையை முறியடித்தார்.
பும்ரா, 32 டெஸ்ட் போட்டிகளில் 60 இன்னிங்ஸ்களில் 147 விக்கெட்டுகளை 21.03 என்ற சராசரியுடன் வீழ்த்தியுள்ளார். அதைப்போல, வாசிம் அக்ரம், 32 டெஸ்ட் போட்டிகளில் 55 இன்னிங்ஸ்களில் 146 விக்கெட்டுகளை 24.11 சராசரியுடன் எடுத்திருந்தார். இந்தப் பட்டியலில் இந்தியாவின் முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே 141 விக்கெட்டுகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார், அவர் 35 டெஸ்ட் போட்டிகளில் 67 இன்னிங்ஸ்களில் இந்த விக்கெட்டுகளைப் பெற்றார். இவர்களுடைய சாதனைகளை முறியடித்து தற்போது பும்ரா முதலிடத்தை பிடித்துள்ளார்.
இந்தச் சாதனை, பும்ராவை ஆசியாவின் மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக உறுதிப்படுத்தியுள்ளது. இதற்கு இவருக்கு பாராட்டுகளும் குவிந்து வருகிறது. அந்த வகையில், முன்னாள் இங்கிலாந்து வீரர் மைக்கேல் ஆதர்டன் “உலகின் நம்பர் ஒன் பந்துவீச்சாளர் என்று அழைக்கப்படுவதற்கு இதுதான் காரணம்,” என்று பாராட்டினார். மேலும், இந்திய அணியின் மற்ற பந்துவீச்சாளர்களான முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் இந்தப் போட்டியில் விக்கெட் எடுக்க திணறிய நிலையில், பும்ராவின் இந்த சாதனை இந்திய அணிக்கு முக்கிய உத்வேகத்தை அளித்துள்ளது.