ஆபாச வசனங்கள் அதிகம்…ரசிகர்களை பதற்றத்தில் ஆழ்த்திய “ஸ்க்விட் கேம் 3”! விமர்சனம் இதோ!
ஸ்க்விட் கேம்’ சீசன் 3 நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகி மக்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது.

நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் உலகளவில் ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட “ஸ்க்விட் கேம் சீசன் 3” வெளியாகியுள்ளது. தென் கொரியாவைச் சேர்ந்த இந்த வெப் சீரிஸ், முதல் சீசனில் இருந்து தனது தனித்துவமான கதைக்களத்தால் உலக ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. முதல் சீசனில் விளையாட்டில் வெற்றி பெற்றால் பணம் கிடைக்கும், ஆனால் தோல்வியடைந்தால் உயிரிழப்பு என்ற கரு பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இரண்டாவது சீசன் பாதியில் முடிந்து, முழுமையான முடிவு மூன்றாவது சீசனில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது ரசிகர்களை ஏமாற்றமடையச் செய்தது.
இந்நிலையில், மூன்றாவது சீசன் இப்போது வெளியாகியுள்ள நிலையில், ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்ததா? இந்த விமர்சனத்தில் பார்க்கலாம்.
கதை
சீசன் 2-ன் முடிவில், ஸ்க்விட் கேம் நிகழ்ச்சியை நடத்தும் முக்கிய வில்லனான தி ஃப்ரண்ட் மேன் (லீ பியூங்-ஹுன்) ஹீரோ சியோங் ஜி-ஹுன்னை (பிளேயர் 456, லீ ஜுங்-ஜே) சுடுவது போலக் காட்டப்பட்டிருந்தது. ஆனால், மூன்றாவது சீசன் தொடங்கும்போது, அவர் உயிர் பிழைத்திருப்பது தெரியவருகிறது. காது ஓரத்தில் ஏற்பட்ட காயத்துடன் உயிருடன் இருக்கும் ஜி-ஹுன், தன்னை ஏன் கொல்லவில்லை என்று வில்லனைப் பார்த்து கேள்வி எழுப்புகிறார்.
முதல் எபிசோடில், நைவ்ஸ் அண்ட் கீஸ் என்ற விளையாட்டில், சிகப்பு பந்து எடுத்தவர்களுக்கு கத்தியும், நீல பந்து எடுத்தவர்களுக்கு சாவியும் வழங்கப்படுகிறது. இந்த விளையாட்டில் இருந்து தப்பிக்க முயலும் ஹீரோ, மற்றவர்களைக் காப்பாற்ற முயற்சிக்கிறாரா அல்லது உயிர் தப்பிக்க மற்றவர்களைக் கொல்கிறாரா என்பது கதையின் மையப்பகுதி. இதற்கிடையில், பிளேயர் 222-க்கு குழந்தை பிறக்கிறது, இது கதையில் மேலும் உணர்ச்சிகரமான திருப்பங்களைச் சேர்க்கிறது. பணத்துக்காக மனிதர்கள் ஒருவரையொருவர் கொல்லும் காட்சிகள் மற்றும் அதைப் பணக்காரர்கள் ரசிக்கும் காட்சிகள் மனதை உலுக்குகின்றன.
நடிகர்களின் நடிப்பு எப்படி?
அதே சமயம், லீ ஜங்-ஜே (கி-ஹன்), லீ பியுங்-ஹன் (ஃப்ரண்ட் மேன்), மற்றும் பார்க் சங்-ஹூன் (ஹியூன்-ஜூ) ஆகியோரின் நடிப்பு மிகவும் பாராட்டப்பட்டுள்ளது. குறிப்பாக, ஹியூன்-ஜூவின் ஆக்ஷன் காட்சிகளும் உணர்ச்சிகரமான தருணங்களும் ரசிகர்களை கவர்ந்துள்ளன. ஆனால், அதே சமயம் 3-வது சிரிஸில் புதிய கதாபாத்திரங்களில் (குறிப்பாக விஐபி-கள்) மற்றும் வசனங்கள் பேசுவது சிலர் மோசமாக இருப்பதாகவும், புதிதாக படித்தவர்களுக்கு அவர்களுடைய கதாபாத்திரங்கள் சரியாக செட் ஆகவில்லை எனவும் விமர்சனங்களை தெரிவித்து வருகிறார்கள்.
மேலும், பலரும் தெரிவித்த விமர்சனங்கள் வைத்து பார்க்கையில், மொத்தமாக இந்த சீசனினில் இடம்பெற்ற விளையாட்டுகள் மிகவும் பார்ப்பதற்கு புதுமையாகவும், உடனடியாக முழுவதுமாக கவரக்கூடிய வகையில் இருப்பதாக தெரிவித்துள்ளனர். உதாரணமாக, ‘ஹைட் அண்ட் சீக்’ விளையாட்டு, ஒரு பிரமாண்டமான மேஸ் அமைப்பில் நடைபெறுவது பார்வையாளர்களை பதற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. ‘ஜம்ப் ரோப்’ மற்றும் ‘ஸ்கை ஸ்க்விட் கேம்’ ஆகியவை கொடூரத்தன்மையில் உச்சம் தொட்டுள்ளன. தயாரிப்பு மதிப்பு (production value) மற்றும் ஒளிப்பதிவு (cinematography) மிகவும் அருமையாக இருப்பதாகவும் பாராட்டி வருகிறார்கள்.
கெட்ட வார்த்தைகள் அதிகம்?
இந்த சீசனுக்கான தமிழ் டப்பிங்கும் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. அதிலும் பார்த்துவிட்டு தமிழ் மக்கள் சொன்ன விமர்சனங்கள் என்னவென்றால், அதிகமான கெட்டவார்த்தைகள் இடம்பெற்றுள்ளது என்பது தான். ஓடிடியில் வெளியானது என்பதால் சென்சார் இல்லை. எனவே, கெட்டவார்த்தைகள் கட் செய்யப்படாமல் அப்படியே வருகிறது. ஒன்று மற்றும் இரண்டாம் பாகத்தில் கெட்டவார்த்தைகள் அதிகமாக இருந்தாலும் கூட மூன்றாம் பாகத்தில் இல்லை என்கிற அளவுக்கு ஆபாச வசனங்கள் காரணமாக தமிழக மக்களிடம் எதிர்மறையான விமர்சனங்கள் எழுந்திருக்கிறது. அதே சமயம் கிளைமாக்ஸ் திருப்தியடையும் வகையில் இல்லை எனவும் விமர்சனங்கள் எழுந்துள்ளது. எனவே, விமர்சனங்கள் அப்படி வருவதன் காரணமாக குடும்பத்துடன் சீரிஸை பார்ப்பதை தவிர்ப்பது நல்லது. 18 வயதுக்கு மேலாக இருப்பவர்கள் தனியாக இந்த சீரிஸை பார்க்கலாம்.