மன்னிப்பு கேட்க சொல்லியும் கேட்கல…பாமகவில் இருந்து அருளை நீக்கிய அன்புமணி!

கட்சித் தலைமை குறித்து ஊடகங்களில் அவதூறான விமர்சனங்களை முன்வைத்து வருவதால் அருள் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கட்சி தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

anbumani and arul mla

சென்னை :  சேலம் மேற்கு தொகுதியின் பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) எம்.எல்.ஏ. அருளை கட்சியிலிருந்து நீக்குவதாக பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார். கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அருள், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார். மேலும், பாமகவினர் யாரும் அருளுடன் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டாம் என்று அன்புமணி அறிவுறுத்தியுள்ளார்.

அருள், கட்சித் தலைமை மீது தொடர்ந்து அவதூறு பரப்பி வந்ததாகவும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாகவும் அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு, அருள் அன்புமணியை வெளிப்படையாக விமர்சித்து பேசியிருந்தார். இதையடுத்து, பாமகவின் மூத்த தலைவர் கே.பாலு, அருளுக்கு 12 மணி நேரத்திற்குள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தார். ஆனால், அருள் மன்னிப்பு கேட்க மறுத்ததால், இன்று (ஜூலை 2, 2025) கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.

இந்த நீக்கம், பாமகவிற்குள் அன்புமணி ராமதாஸுக்கும், கட்சி நிறுவனர் எஸ்.ராமதாஸுக்கும் இடையேயான உட்கட்சி மோதலின் ஒரு பகுதியாக பார்க்கப்படுகிறது. அருள், ராமதாஸின் தீவிர ஆதரவாளராக இருந்தவர். முன்னதாக, ஜூன் 2025ல், அருள் மற்றும் மற்றொரு எம்.எல்.ஏ. ஜி.கே.மணி ஆகியோர், அன்புமணியின் மாவட்ட பொதுக்குழு கூட்டங்களை உடல்நலக் காரணங்களைக் கூறி தவிர்த்தனர், இது அவர்கள் அன்புமணியின் தலைமையை ஏற்க மறுப்பதாகவே கருதப்பட்டது. இப்போது அவரை காட்சியில் இருந்து நீக்கியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகவும் வெடித்துள்ளது.

இது குறித்து வெளியாகியுள்ள அறிக்கையில், சேலம் மாநகர் மாவட்டத்தைச் சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சியின் சேலம் மேற்கு சட்டப்பேரவை உறுப்பினர் அருள் அவர்கள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறும் வகையிலும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார், அண்மைக்காலங்களில் கட்சித் தலைமை குறித்து செய்தித் தொலைக்காட்சிகள் உள்ளிட்ட முதன்மை ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் அவதூறான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.

இது குறித்து ஆய்வு செய்வதற்காக அமைக்கப் பட்ட ஒழுங்கு நடவடிக்கைக் குழு, இது குறித்து விசாரித்து வந்த நிலையில், கட்சியின் கட்டுப்பாட்டை மீறும் வகையிலான நடவடிக்கைகளுக்காக கட்சித் தலைமையிடம் 12 மணி நேரத்திற்குள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று திரு. இரா. அருள் அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. ஆனால், அதை அவர் மதிக்கவில்லை.

அதைத்தொடர்ந்து கட்சித் தலைமைக்கு ஒழுங்கு நடவடிக்கைக்குழு அளித்த பரிந்துரை அறிக்கையின் அடிப்படையில், பாட்டாளி மக்கள் கட்சியின் அமைப்புச் சட்ட விதி 30-இன்படி பாட்டாளி மக்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் இன்று (02.07.2025) புதன்கிழமை முதல் அருள் அவர்கள் நீக்கப்படுகிறார். பாட்டாளி மக்கள் கட்சியினர் எவரும் அவருடன் எந்த வகையிலும் தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்