பள்ளி வேன் மீது ரயில் மோதி கோர விபத்தில் இதுவரை நடந்தது என்ன.?
உயிரிழந்த மாணவர்கள் குடும்பத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மாணவர்கள் நிவாஸ், சாருமதி ஆகியோரின் குடும்பத்திற்கு தலா 5 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார்.

கடலூர் : கடலூர் மாவட்டம், செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8) காலை 7:40 மணியளவில் தனியார் பள்ளி வேன் ஒன்று ரயில்வே கேட்டை (லெவல் கிராசிங் எண் 170, இன்டர்லாக் இல்லாத கேட்) கடக்க முயன்றபோது, விழுப்புரம்-மயிலாடுதுறை பயணிகள் ரயில் (எண் 56813) மோதியதால் கோர விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் வேன் சுமார் 50 மீட்டர் தூரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டு முற்றிலும் சேதமடைந்தது. இந்த விபத்து அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது இந்த விபத்தில் சிக்கி, சாருமதி (15), செழியன் (14) மற்றும் விமலேஷ் (10) ஆகிய 3 மாணவர்கள் உயிரிழந்தனர்.
இதில், சாருமதி மற்றும் செழியன் ஆகிய இருவரும் அக்கா – தம்பி என்பது சோகத்தின் உச்சம். மேலும், படுகாயமடைந்த சில மாணவர்கள், டிரைவர் சங்கர் ஆகியோர் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.
மாணவர்களின் புத்தகப் பைகள் தண்டவாளத்தில் சிதறிக் கிடக்கும் காட்சி மனதை உலுக்குகின்றன. இதையடுத்து, உயிரிழந்த மாணவர்கள் குடும்பத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மாணவர்கள் நிவாஸ், சாருமதி ஆகியோரின் குடும்பத்திற்கு தலா 5 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார்.
மேலும், படுகாயமடைந்து தீவிர சிகிச்சையில் உள்ள 3 மாணவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்கவும், அமைச்சர் MRK பன்னீர்செல்வத்தை நேரில் சென்று உதவி, ஆய்வு செய்யவும் உத்தரவிட்டுள்ளார். இதனிடையே, அமைச்சர்கள் சி.வி.கணேசன், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், அன்பில் மகேஸ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர்.
கேட் கீப்பர் கைது
பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் அலட்சியமாகச் செயல்பட்டதாகக் கேட் கீப்பர் பங்கஜ் சர்மாவை போலீசார் கைது செய்துள்ளனர். விபத்து தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், முதலில் ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளுக்கு உரிய சிகிச்சை அளிக்கும் பணிகள் நடந்து வருவதாகவும் மாவட்ட நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
என்ன நடந்தது?
முதற்கட்ட தகவலின்படி, ‘பள்ளிக்கு சீக்கிரம் செல்ல வேண்டும், ஆகவே ரயில்வே கேட்டை திறங்கள்’ என பள்ளி வேன் ஓட்டுநர்தான் கேட் கீப்பரிடம் வற்புறுத்தியுள்ளார்’ என்று ரயில்வே முரண் தகவல் தெரிவித்துள்ளார்.
”கேட் கீப்பர் தூங்கியதால்தான் விபத்து, அவருக்கு தமிழும் தெரியாது. வட மாநில தொழிலாளியைகொண்டு வந்து வைத்ததால், பல்வேறு இன்னல்கள் இப்படி நடக்கின்றன” என்று பொதுமக்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.
விபத்துக்கான காரணங்கள்:
கேட் கீப்பரின் அலட்சியம்: ரயில்வே கேட் மூடப்படாமல் திறந்திருந்ததாகவும், கேட் கீப்பர் பங்கஜ் சர்மா தூங்கியிருந்ததாகவோ அல்லது அலட்சியமாக இருந்ததாகவோ பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதனால், வேன் ஓட்டுநர் கேட்டை கடக்க முயன்றபோது விபத்து நிகழ்ந்தது.
வேன் ஓட்டுநரின் கவனக்குறைவு: ரயில்வே துறையின் விளக்கப்படி, கேட் கீப்பர் கேட்டை மூட முயன்றபோது, வேன் ஓட்டுநர் வேகமாக வேனை இயக்கியதால் விபத்து நேரிட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், வேன் ஓட்டுநர் சங்கர் மற்றும் காயமடைந்த மாணவன் விஸ்வேஷ் ஆகியோர், கேட் திறந்திருந்ததாகவும், சிக்னல் இல்லாததாகவும் தெரிவித்துள்ளனர்.
தொழில்நுட்பக் கோளாறு: கேட் மூடுவதற்கான தொலைபேசி மூல தகவல் முறையாக அளிக்கப்படவில்லை என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளன.
நிவாரணம்:
தமிழக அரசு இழப்பீடு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சம், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 நிவாரணம் அறிவித்தார்.
ரயில்வே தரப்பில் இழப்பீடு: படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.2.50 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000, உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சமும் வழங்குவதாக அறிவிக்கப்படுள்ளது.
அரசியல் தலைவர்களின் இரங்கல்:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், டிடிவி தினகரன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்தனர்.