3வது டெஸ்ட் போட்டி: தீவிர பயிற்சி மேற்கொள்ளும் இந்திய அணி..!
இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டி, லார்ட்ஸில் வரும் 10ம் தேதி தொடங்கவுள்ளது.

லண்டன் : இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான, 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லண்டனில் நாளை மறுநாள் தொடங்க உள்ளது. 5 போட்டிகளை கொண்ட இத்தொடரில், இந்தத் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியை நடத்தும் இங்கிலாந்து வென்றது, இரண்டாவது டெஸ்ட் போட்டியை விருந்தினர் அணி இந்தியா வென்றது.
தற்போது இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று, சமநிலையில் உள்ளன. இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி ஜூலை 10 ஆம் தேதி லண்டனில் உள்ள லார்ட்ஸில் நடைபெறும். இந்த டெஸ்ட் போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 3:30 மணிக்கு தொடங்கும். போட்டியின் டாஸ் பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும். இந்த போட்டிக்கான பிளேயிங் லெவனை இரு அணியும் இதுவரை அறிவிக்கவில்லை.
இந்த நிலையில், போட்டிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, லண்டன் சென்றடைந்த இந்திய அணி லார்ட்ஸ் மைதானத்தில் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள். குறிப்பாக, பும்ராவும் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். முன்னதாக, 2-வது டெஸ்ட் போட்டியின் பிளேயிங் 11-ல் இடம்பெறாத பும்ரா, லாட்ஸில் நடைபெறவுள்ள 3வது டெஸ்ட்டில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், பும்ராவின் சவால் மிகுந்த பந்துவீச்சை எதிர்கொள்ள இங்கிலாந்து அணி சிறப்பான திட்டங்களுடன் தயாராக இருக்க வேண்டும் என்று அந்த அணியின் ஹெட் கோச் மெக்கல்லம் கருத்து தெரிவித்துள்ளார். மேலும், ஆகாஷ் தீப் அபாரத் திறமையை வெளிப்படுத்தியுள்ளதால் இங்கிலாந்துக்கு கடும் போட்டி எழுந்துள்ளது.
இந்தியா இதுவரை லார்ட்ஸில் 19 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது, அதில் 3 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 1986 ஆம் ஆண்டு கபில் தேவ் தலைமையில் முதல் போட்டியிலும், 2014 ஆம் ஆண்டு எம், எஸ் தோனி தலைமையில் இரண்டாவது போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்றது. மூன்றாவது போட்டியை 2021 ஆம் ஆண்டு விராட் கோலி தலைமையில் 151 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது குறிப்பிடத்தக்கது.