பண மோசடி வழக்கு: பிரபல மலையாள நடிகர் செளபின் சாஹிர் கைது.!
மஞ்சுமல் பாய்ஸ் திரைப்பட நடிகரும் தயாரிப்பாளருமான சௌபின் ஷாஹிர் நிதி மோசடி குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டார்.

கொச்சி : பிரபல மலையாள நடிகர் சௌபின் சாகிர் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மஞ்சுமல் பாய்ஸ் படத்தின் தயாரிப்புக்கு ரூ.7 கோடி பெற்றுக்கொண்டு பணத்தையோ, லாப் விகிதத்தையோ தரவில்லை என சிராஜ் என்பவர் புகார் அளித்திருந்தார்.
இந்த வழக்கு தொடர்பாக சௌபின் சாகிர், அவரது தந்தை உட்பட 3 பேரும் ஏற்கெனவே முன்ஜாமின் வாங்கி இருந்த நிலையில், விசாரணைக்கு பின் சொந்த ஜாமினில் அவர் விடுவிக்கப்பட்டார். சௌபின் ஷாஹிரின் தயாரிப்பு நிறுவனமான பராவா பிலிம்ஸ் ரூ.7 கோடி மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டதிலிருந்து விசாரணையில் உள்ளது.
படத்தின் நிதி குறித்து முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று காவல்துறை கூறியுள்ளது. படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே, சௌபின் மோசடியை முன்கூட்டியே திட்டமிட்டதாகவும் காவல்துறை குற்றம் சாட்டியுள்ளது. மஞ்சுமல் பாய்ஸில் ரூ.7 கோடி முதலீடு செய்ததாகக் கூறி சிராஜ் வலியவீட்டில் முதலில் இந்தக் குற்றச்சாட்டுகளை எழுப்பினார்.
படத்தின் மொத்த பட்ஜெட் ரூ.22 கோடி என்று தனக்குத் தெரிவிக்கப்பட்டதாகவும், பின்னர் அந்தப் படம் ரூ.18.65 கோடிக்குள் தயாரிக்கப்பட்டது என்பதை தெரிய வந்ததாகவும், இதில் தனக்கு வாக்குறுதியளிக்கப்பட்ட 40 சதவீத லாபத்தைப் பெறவில்லை என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.