“தீயவர்களின் எண்ணத்துக்கு இடம் கொடுக்காதீர்”…காமராஜர் விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் அட்வைஸ்!

மரியாதைக்குரிய தலைவர்களின் மாண்பைக் காக்கும் வகையில்தான் எந்தக் கருத்தும் பகிரப்பட வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

mk stalin KAMARAJAR

சென்னை : திமுக துணைப் பொதுச்செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான திருச்சி சிவா, மறைந்த முன்னாள் முதலமைச்சர் காமராஜர் குறித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது.  சென்னையில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில், முன்னாள் முதல்வர் காமராஜர், குளிர்சாதன வசதி இல்லாமல் தூங்க மாட்டார் என்றும் “நீங்கள் தான் இந்த நாட்டையும், ஜனநாயகத்தையும் காப்பாற்ற வேண்டும்” என்று கருணாநிதியிடம் கூறியதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

இவர் பேசியதை பார்த்த அரசியல் தலைவர்கள் பலரும் இவருடைய பேச்சுக்கு கண்டனங்களை தெரிவிக்க தொடங்கிவிட்டார்கள். உதாரணமாக, தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்தார். “காமராஜர் தற்போது உயிருடன் இல்லை என்பதால், திருச்சி சிவா எதையோ பேசிக் கொண்டிருக்கிறார். காமராஜர், திமுகவுக்கு ஓட்டு போடுவது திருடனை வீட்டுக்கு அழைப்பதற்கு ஒப்பானது என்று கூறியவர். அவரைப் பற்றி கண்டபடி பேசக் கூடாது” என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், திருச்சி சிவா பேசியதற்கு அரசியல் வட்டாரத்தில் எதிர்ப்புகள் கிளம்பியிருக்கும் சூழலில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் கலகமூட்டிக் குளிர்காய நினைக்கும் தீயவர்களின் எண்ணத்துக்கு இடம் கொடுக்காதீர்! என கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தலை வழங்கும் வகையில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் தன்னுடைய பதிவில் கூறியதாவது ” கலகமூட்டிக் குளிர்காய நினைக்கும் தீயவர்களின் எண்ணத்துக்கு இடம் கொடுக்காதீர்! பெருந்தலைவர் காமராசரைப் ‘பச்சைத்தமிழர்’ என்று போற்றியவர் தந்தை பெரியார். குடியாத்தம் இடைத்தேர்தலில் பெருந்தலைவர்க்கு எதிராக வேட்பாளரை நிறுத்த வேண்டாம் என முடிவெடுத்தவர் பேரறிஞர் அண்ணா.

பெருந்தலைவர் மறைந்தபோது ஒரு மகன் போல நின்று இறுதி மரியாதை ஏற்பாடுகளைச் செய்து, நினைவகம் அமைத்து, அவரது பிறந்தநாளைக் கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்தவர் தமிழினத் தலைவர் கலைஞர். உடல் நலிவுற்ற நிலையிலும் எனது திருமணத்துக்கு நேரில் வந்து பெருந்தலைவர் வாழ்த்தியது என் வாழ்நாளில் கிடைத்தற்கரிய பெரும்பேறு! அத்தகைய பெருந்தலைவர், பெருந்தமிழர் குறித்துப் பொதுவெளியில் சர்ச்சைக்குரிய விவாதங்கள் நடப்பது சரியல்ல.

மரியாதைக்குரிய தலைவர்களின் மாண்பைக் காக்கும் வகையில்தான் எந்தக் கருத்தும் பகிரப்பட வேண்டும். சமூகநீதியையும் மதச்சார்பற்ற நல்லிணக்கத்தையும் உருவாக்க வாழ்நாளெல்லாம் உழைத்த பெருந்தலைவரின் கனவுகளை நிறைவேற்ற அனைவரும் ஒன்று சேர்ந்து உழைப்போம்! வீண் விவாதங்களைத் தவிர்ப்போம்” எனவும் தன்னுடைய பதிவில் ஸ்டாலின் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்