உலகளவில் 20-ல் ஒருவரை பாதிக்கும் நோய்…ட்ரம்பிற்கு ஏற்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தகவல்!
ட்ரம்பிற்கு ஏற்பட்டுள்ள நோய் - வெள்ளை மாளிகை தகவல் அதிபர் ட்ரம்ப் காலில் ஏற்பட்ட வீக்கத்தை பரிசோதித்ததில் அவருக்கு 'Chronic Venous Insufficiency' எனப்படும் நரம்பு நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது கால்களில் ஏற்பட்ட வீக்கத்தை அடுத்து மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். இதில், அவருக்கு Chronic Venous Insufficiency (நாள்பட்ட நரம்பு பற்றாக்குறை) எனப்படும் நரம்பு நோய் இருப்பது கண்டறியப்பட்டதாக வெள்ளை மாளிகை ஜூலை 17, 2025 அன்று அறிவித்தது. இந்த நோய், கால்களில் உள்ள நரம்புகளில் ரத்தம் தேங்குவதால், நரம்பு சுவர்களில் அழுத்தம் மற்றும் வீக்கம் அதிகரிக்க வழிவகுக்கிறது. இதயத்திற்கு ரத்தம் சரியாக திரும்பாததால் இந்த நிலை ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரோலின் லெவிட், இந்த நோய் 70 வயதுக்கு மேற்பட்டவர்களிடம் பொதுவானது மற்றும் ஆபத்தற்றது என்று கூறினார். உலகளவில் 20 பேரில் ஒருவரை இந்த நோய் பாதிக்கிறது என்று கிளீவ்லேண்ட் கிளினிக் தெரிவிக்கிறது. ட்ரம்பின் மருத்துவ பரிசோதனையில், Deep Vein Thrombosis அல்லது தமனி நோய் போன்ற பிற தீவிர நிலைகள் இல்லை என்பதும், அவரது இதய செயல்பாடு மற்றும் மற்ற மருத்துவ பரிசோதனைகள் இயல்பாக இருப்பதும் உறுதி செய்யப்பட்டது.
ட்ரம்பின் கைகளில் காணப்பட்ட சிறிய காயங்களைப் பற்றிய ஊகங்களுக்கு பதிலளித்த லெவிட், இவை அடிக்கடி கைகுலுக்குவதாலும், இதய ஆரோக்கியத்திற்காக ட்ரம்ப் எடுத்து வந்த ஆஸ்பிரின் மருந்தின் பக்கவிளைவுகளாலும் ஏற்பட்டவை என்று விளக்கினார். இந்த நோய் உயிருக்கு ஆபத்தானது இல்லை என்றாலும், கால் வீக்கம், வலி, மற்றும் தோல் நிறமாற்றம் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தலாம். கம்ப்ரஷன் ஸ்டாக்கிங்ஸ் அணிவது, கால்களை உயர்த்தி வைப்பது, உடற்பயிற்சி, மற்றும் எடை குறைப்பு போன்றவை இதற்கு சிகிச்சையாக அளிக்கப்படுகின்றன.
மேலும் பலர் ட்ரம்பின் உடல்நிலை குறித்து கவலை தெரிவித்துள்ளனர். இருப்பினும், வெள்ளை மாளிகை ட்ரம்ப் “மிகச் சிறந்த உடல்நலத்துடன்” இருப்பதாகவும், இந்த நோயால் எந்த அசௌகரியமும் இல்லை என்றும் உறுதிப்படுத்தியுள்ளது. 79 வயதான ட்ரம்ப், இந்த நிலையை கையாளுவதற்கு தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
கோவை மாணவி கூட்டு வன்கொடுமை – 7 பேருக்கு வாழ்நாள் சிறை.!
July 18, 2025
நாளை மறுநாள் இந்தியா கூட்டணி தலைவர்கள் கூட்டம்.!
July 18, 2025