தமிழகம் வந்தடைந்த பிரதமர் மோடி…தூத்துக்குடியில் உற்சாக வரவேற்பு!

மாலத்தீவு பயணத்தை முடித்துக்கொண்டு 2 நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாடு வந்தடைந்தார்.

PM Modi Tamilnadu Visit

தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு பயணத்தை முடித்துக்கொண்டு, ஜூலை 26 இன்று அன்று மாலை 7:50 மணிக்கு தூத்துக்குடி விமான நிலையம் வந்தடைந்தார். இரு நாள் பயணமாக தமிழ்நாட்டிற்கு வருகை தந்த அவர், தூத்துக்குடியில் ரூ.4,800 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைக்கவுள்ளார்.

இந்தப் பயணம், தமிழகத்தின் உட்கட்டமைப்பு மற்றும் கலாசார முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் ஒரு முக்கிய நிகழ்வாக அமைகிறது. பிரதமரின் வருகைக்காக தூத்துக்குடியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தனி விமானம் மூலம் வந்தடைந்த அவருக்கு பாஜக ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். வேட்டி சட்டையுடன் வருகை தந்த அவருக்கு தமிழக ஆளுநர் ஆர்.எம்.ரவி  பொன்னாடை போர்த்தி வரவேற்றார். இந்த நிகழ்வில் அமைச்சர் தங்கம் தென்னரசுவும் உடன் இருந்தார்.

இன்னும் சற்று நேரத்தில் தூத்துக்குடியில், பிரதமர் மோடி விமான நிலையத்தின் புதிய முனையக் கட்டடத்தை திறந்து வைப்பார், இதன் ஓடுதளம் 1,350 மீட்டரில் இருந்து 3,115 மீட்டராக விரிவாக்கப்பட்டுள்ளது. மேலும், வி.ஓ.சிதம்பரனார் துறைமுகத்தில் வடக்கு கார்கோ பெர்த் III திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுவார், இது துறைமுகத்தின் சரக்கு கையாளும் திறனை மேம்படுத்தும். தூத்துக்குடி துறைமுகத்தை அணுகும் ஆறு வழிச் சாலை (ரூ.200 கோடி) மற்றும் தஞ்சை-சேத்தியாத்தோப்பு தேசிய நெடுஞ்சாலை (ரூ.2,357 கோடி) ஆகியவற்றையும் அவர் நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார்.

தூத்துக்குடி நிகழ்ச்சிகளை முடித்த பின்னர், பிரதமர் மோடி இரவு 9:30 மணிக்கு இந்திய விமானப்படை விமானம் மூலம் திருச்சிக்கு புறப்படுகிறார். அங்கு இரவு தங்கிய பிறகு, 27-ஆம் தேதி காலை அரியலூர் மாவட்டத்திலுள்ள கங்கைகொண்ட சோழபுரத்திற்கு செல்கிறார். அங்கு ராஜேந்திர சோழனின் திருவாதிரை பிறந்தநாள் விழாவில் பங்கேற்கிறார். முன்னதாக, 700 மீட்டர் தூரத்திற்கு ரோடு ஷோ நடத்தவும், பாஜக நிர்வாகிகளை சந்திக்கவும் திட்டமிட்டுள்ளார்.

கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெறும் விழாவில், பிரதமர் மோடி ராஜேந்திர சோழனின் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார். மேலும், இளையராஜாவின் திருவாசகம் சிம்பொனி இசை நிகழ்ச்சியை கண்டு களித்து, ஆதீனங்கள் மற்றும் சாதுக்களுடன் உரையாட உள்ளார். இந்த விழாவிற்காக பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்