தூத்துக்குடி விமான நிலைய புதிய முனையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி…என்னென்ன சிறப்பம்சங்கள்?
ரூ.450 கோடியில் கட்டப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தின் புதிய முனையத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.

தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு பயணத்தை முடித்துவிட்டு, ஜூலை 26, 2025 அன்று மாலை 7:50 மணிக்கு தனி விமானம் மூலம் தூத்துக்குடி வந்தடைந்து, ரூ.452 கோடி செலவில் சர்வதேச தரத்தில் விரிவாக்கப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தின் புதிய முனையக் கட்டடத்தை திறந்து வைத்தார்.
தூத்துக்குடி வந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. விமான நிலையத்தில் பிரதமர் மோடியை வரவேற்ற அமைச்சர் தங்கம் தென்னரசு வள்ளுவர் கோட்டம் போன்ற நினைவு பரிசை வழங்கினார். பிறகு மேடைக்கு வந்த பிரதமர் மோடி விமான நிலையத்தின் புதிய முனையக் கட்டடத்தை திறந்து வைத்தார்.
இந்த விழாவின் மேடையில் பிரதமர் நநேர்திர மோடி உடன் அமைச்சர் தங்கம் தென்னரசு, கீதா ஜீவன், கனிமொழி எம்.பி உள்ளிட்டோர் இருந்தார்கள்.
சிறப்பம்சங்கள்
தூத்துக்குடி நகரிலிருந்து 14 கி.மீ. தொலைவில், வாகைகுளத்தில் அமைந்துள்ள இந்த விமான நிலையம், சென்னை, பெங்களூரு உள்ளிட்ட முக்கிய நகரங்களுடன் இணைக்கப்பட்டு, இரு தனியார் விமான நிறுவனங்கள் மூலம் தினமும் 9 விமான சேவைகளை வழங்குகிறது.
பிரதமரின் வருகைக்காக 2,100 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர், மேலும் இந்த நிகழ்வு தமிழகத்தின் உட்கட்டமைப்பு வளர்ச்சியில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்தது.தூத்துக்குடி விமான நிலையத்தின் புதிய முனையம், 17,340 சதுர மீட்டர் பரப்பளவில், ஆண்டுக்கு 20 லட்சம் பயணிகளையும், ஒரு மணி நேரத்திற்கு 1,440 பயணிகளையும் கையாளும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த முனையத்தில் 4 நுழைவு வாயில்கள், 3 ஏரோ பிரிட்ஜ்கள், 21 செக்-இன் கவுன்ட்டர்கள், 2 கன்வேயர் பெல்ட்கள், 644 இருக்கைகள், மற்றும் 2 விஐபி ஒய்வு அறைகள் உள்ளன. விமான நிலையத்தின் ஓடுபாதை, முன்பு 1,350 மீட்டர் நீளமாக இருந்தது, தற்போது 3,115 மீட்டர் நீளத்திற்கும், 45 மீட்டர் அகலத்திற்கும் விரிவாக்கப்பட்டு, ஏ-321 ரக ஏர்பஸ் போன்ற பெரிய விமானங்களை இயக்கும் திறனைப் பெற்றுள்ளது.இந்த விரிவாக்கத்தின் மூலம், ஒரே நேரத்தில் 5 விமானங்களை நிறுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், தூத்துக்குடி-திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையுடன் இணைக்க, 1 கி.மீ. நீளமுள்ள இணைப்பு சாலையும், 500 பயணி வாகனங்களுக்கான பார்க்கிங் வசதியும் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த புதிய வசதிகள், தென் தமிழகத்தின் விமானப் போக்குவரத்து இணைப்பை மேம்படுத்துவதோடு, தூத்துக்குடி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் பொருளாதார வளர்ச்சி மற்றும் சுற்றுலாவை ஊக்குவிக்கும். பிரதமர் மோடி, இந்தத் திறப்பு விழாவில், வி.ஓ.சிதம்பரனார் துறைமுகத்தில் வடக்கு கார்கோ பெர்த் III திட்டத்திற்கும் அடிக்கல் நாட்டினார்.இந்த நிகழ்வு, தமிழகத்திற்கு மத்திய அரசின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்துவதாக அமைந்தது.
மேலும், பிரதமர், மறுநாள் (ஜூலை 27) கங்கைகொண்ட சோழபுரம் சென்று, ராஜேந்திர சோழனின் ஆயிரமாவது ஆண்டு விழாவில் பங்கேற்க உள்ளார். தூத்துக்குடி விமான நிலையத்தின் இந்த மேம்பாடு, தென் மாவட்டங்களுக்கு முக்கியமான உட்கட்டமைப்பு முன்னேற்றமாகக் கருதப்படுகிறது. இந்த விழாவில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய மற்றும் மாநில அமைச்சர்கள், உள்ளூர் பிரமுகர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.