டெல்லி : இந்தியாவில் இரவு நேரச் சாலை விபத்துகளைக் குறைக்கவும், கண் கூசும் அதிதிறன் கொண்ட வெளிச்சத்தைத் தவிர்க்கவும் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் கார் மற்றும் பைக்குகளின் முகப்பு விளக்குகளுக்கான (Headlights) விதிகளில் அதிரடி மாற்றங்களைக் கொண்டு வர திட்டமிட்டுள்ளது.
புதிதாக அறிமுகமாகும் இருசக்கர வாகனங்களில் இருக்கும் தானியங்கி முகப்பு விளக்கு அமைப்பு (Automatic Headlight On - AHO), வாகனம் ஸ்டார்ட் ஆனதும் தானாகவே 'பாஸிங் பீம்' அல்லது 'லோ-பீம்' (குறைந்த தூர வெளிச்சம்) முறையில் மட்டுமே இயங்கும் வகையில் மாற்றப்பட உள்ளது.
தற்போதுள்ள அமைப்பில் வாகன அமைப்பைப் பொறுத்து ஹை-பீம் அல்லது லோ-பீம் என மாறிக்கொள்ளும் வசதி உள்ளது. ஆனால், புதிய விதியின்படி ஏப்ரல் 1, 2028 முதல் புதிய இருசக்கர வாகனங்களில் இந்த தானியங்கி விளக்குகள் லோ-பீம் முறையில் மட்டுமே செயல்பட வேண்டும் என்பது கட்டாயமாக்கப்படவுள்ளது.
எதிரே வரும் வாகன ஓட்டிகளின் கண்களைப் பறிக்கும் வகையில் மிக பிரகாசமாக ஒளிரும் முகப்பு விளக்குகளின் ஒளிச் செறிவுத் திறன் (Luminous Intensity) கணிசமாகக் குறைக்கப்பட உள்ளது. ஒளியின் தீவிரத்தை அளவிடும் அலகான 'கேண்டெலா' (Candela) அடிப்படையில் இந்த வரம்பு மாற்றப்படுகிறது.
இதற்கான அதிகபட்ச வெளிச்ச வரம்பு 1.50 லட்சம் கேண்டெலாவிலிருந்து 1 லட்சம் கேண்டெலாவாகக் குறைக்கப்படுகிறது. கார்களுக்கான அதிகபட்ச வெளிச்ச வரம்பு 2.25 லட்சம் கேண்டெலாவிலிருந்து 1.50 லட்சம் கேண்டெலாவாகக் குறைக்கப்படுகிறது. கூடுதலாக, முகப்பு விளக்குகள் மற்றும் பனி விளக்குகளில் இருந்து வெளிப்படும் வெள்ளை ஒளியின் நிற வெப்பநிலை (Colour Temperature) அதிகபட்சமாக 6,500 கெல்வின் (Kelvin) ஆகக் கட்டுப்படுத்தப்படவும் திட்டமிடப்பட்டுள்ளது.
வாகன ஓட்டிகளுக்குப் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தியும் லோ-பீம் பயன்பாடு அதிகரிக்காததால் அரசு இந்த வரைவு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த புதிய விதிகள் அனைத்தும் ஏப்ரல் 2027 முதல் புதிய வாகனங்களுக்கு அமலுக்கு வர வாய்ப்புள்ளது.
விதிகளை மீறி அதிக வெளிச்சம் தரும் சட்டவிரோத எல்.இ.டி விளக்குகளைப் பயன்படுத்துபவர்களுக்கும், விதியை மீறுபவர்களுக்கும் கடுமையான அபராதம் விதிக்கப்பட உள்ளது. இந்த மாற்றங்கள் மூலம் இரவு நேரங்களில் எதிரே வரும் வாகன ஓட்டிகள் கண் கூச்சம் அடைந்து விபத்துக்குள்ளாவது பெருமளவில் தடுக்கப்படும் என போக்குவரத்துத் துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்