டெல்லி : இந்தியாவின் குடும்பங்களுக்கான எலக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தையில் தற்பொழுது டிவிஎஸ் மற்றும் ஹீரோ ஆகிய இரு பாரம்பரிய நிறுவனங்களும் தங்களது தரமான தயாரிப்புகள் மூலம் அசைக்க முடியாத சாம்ராஜ்யத்தை நடத்தி வருகின்றன. உங்களது தினசரி ஆபீஸ், கல்லூரி மற்றும் குடும்பப் பயன்பாட்டிற்கு நல்ல சொகுசான ரைடிங், சிறந்த மைலேஜ் மற்றும் கம்மி பயணச் செலவைக் கொடுக்கக்கூடிய ஒரு வண்டியைத் தேடினால், சந்தையில் தற்பொழுது டிவிஎஸ் ஐகியூப் மற்றும் விடா VX2 பிளஸ் ஆகிய இரண்டும் மிக வலுவான ஆப்ஷன்களாக உள்ளன. இந்த இரண்டு வண்டிகளுக்கு இடையே இருக்கும் எதார்த்தமான வேறுபாடுகள், விலை மற்றும் மைலேஜ் விபரங்களை பற்றி பார்ப்போம்.

விலை விவரம்

விலையைப் பொறுத்தவரை இரண்டு வண்டிகளுக்கும் இடையே ஒரு கணிசமான வித்தியாசம் உள்ளது. டிவிஎஸ் ஐகியூப் ஆரம்ப மாடலின் எஃபெக்டிவ் எக்ஸ்-ஷோரூம் விலை சலுகைகளுக்குப் பிறகு சுமார் ரூ.95,124 முதல் தொடங்குகிறது. அதேசமயம், இதன் நடுத்தர 3.1kWh பேட்டரி மாடலின் விலை சுமார் ரூ.1,04,962 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மறுபுறம், ஹீரோ நிறுவனத்தின் பிரீமியம் இவி பிராண்டான விடா VX2 பிளஸ் (3.4kWh) மாடலின் டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலை சுமார் ரூ.1,40,990 என்ற சற்று பிரீமியம் விலையில் கிடைக்கிறது. ஆரம்ப முதலீடு மிகவும் குறைவாக இருக்க வேண்டும் மற்றும் கம்மி பட்ஜெட்டில் வண்டி வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு டிவிஎஸ் ஐகியூப் தான் மிகச்சிறந்த சாய்ஸ் ஆகும்.

பேட்டரி, மைலேஜ்

மைலேஜ் மற்றும் பேட்டரி ஆப்ஷன்களில் இரண்டு வண்டிகளுமே ஒன்றுக்கொன்று சளைக்காமல் மிக நெருக்கமான போட்டியைத் தருகின்றன. டிவிஎஸ் ஐகியூப் வண்டியின் 3.1kWh மாடல் சிங்கிள் சார்ஜில் 123 கிலோமீட்டர் வரை மைலேஜ் (IDC Range) வழங்கும். அதேசமயம், இதன் பெரிய 3.5kWh வேரியண்ட் மாடல் 145 கிலோமீட்டர் வரை சிறந்த மைலேஜை வாரி வழங்குகிறது. இந்த 3.1kWh பேட்டரியை 0-விலிருந்து 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய தோராயமாக 4 மணி நேரம் 3 நிமிடங்கள் ஆகும்.

ஹீரோ விடா VX2 பிளஸ் மாடலில் 3.4kWh பேட்டரி பேக் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை ஒரே ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால், அதிகபட்சமாக 146 கிலோமீட்டர் வரை மைலேஜ் தரும் என்று சான்றளிக்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை 0-விலிருந்து 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய வீட்டுச் சார்ஜர் மூலம் தோராயமாக 4 மணி நேரம் 44 நிமிடங்கள் ஆகும். இந்த வண்டி மணிக்கு அதிகபட்சமாக 80 கிமீ டாப் ஸ்பீடில் செல்லக்கூடியது மற்றும் இதன் ஒட்டுமொத்த எடை 115 கிலோ மட்டுமே ஆகும்.

வண்டியில் வேற என்ன ஸ்பெஷல் இருக்கு?

டிவிஎஸ் ஐகியூப் வண்டியில் கியூ-பார்க் அசிஸ்ட் எனப்படும் ரிவர்ஸ் வசதி, மேடான சாலைகளில் வண்டி பின்னோக்கிச் சறுக்காமல் தடுக்கும் ஹில் ஹோல்டு மற்றும் ப்ளூடூத் ஸ்மார்ட் கனெக்டிவிட்டி என ஒரு பக்கா ஃபேமிலி இவி-க்குத் தேவையான அனைத்து வசதிகளும் நிறைந்துள்ளன.ஆனால், விடா VX2 பிளஸ் வண்டியின் மிகப்பெரிய உலகத்தர சிறப்பம்சமே இதிலுள்ள கழற்றக்கூடிய இரட்டை பேட்டரி அமைப்பு (Removable Battery System) தான்.

அடுக்குமாடி குடியிருப்பில் (Apartment) வசிப்பவர்களுக்கும், வண்டி நிறுத்தும் பார்க்கிங் இடத்தில் சார்ஜிங் பிளக் பாயிண்ட் வசதி இல்லாதவர்களுக்கும் இது ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதம் ஆகும். வண்டியில் இருக்கும் பேட்டரியை மிக எளிதாகக் கழற்றி, மொபைல் போனைப் போல வீட்டிற்குள் அல்லது ஆபீஸ் அறைக்குள் எடுத்துச் சென்று அலாதியான சௌகரியத்துடன் சார்ஜ் செய்து கொள்ளலாம்.

இரண்டில் யாருக்கு எது பெஸ்ட்?

உங்களுக்கு இந்திய அளவில் லட்சக்கணக்கான குடும்பங்களால் நம்பப்பட்ட ஒரு அசல் பாரம்பரியமான குடும்ப ஸ்கூட்டர் தோற்றமும், மிக வலுவான சர்வீஸ் நெட்வொர்க் சப்போர்ட்டும், கம்மி பட்ஜெட்டில் சிறந்த இவி அனுபவமும் வேண்டும் என்று நினைத்தால், நீங்கள் தாராளமாக டிவிஎஸ் ஐகியூப் (TVS iQube) மாடலைத் தேர்வு செய்யலாம். இது புதிய வாடிக்கையாளர்களுக்கு ஒரு மிக பாதுகாப்பான சாய்ஸ் ஆகும்.

ஆனால், உங்களது அப்பார்ட்மெண்ட்டில் அல்லது வண்டி நிறுத்தும் இடத்தில் சார்ஜ் செய்ய எந்தவொரு நம்பகமான பிளக் வசதியும் இல்லை, பேட்டரியை வீட்டிற்குள் எடுத்துச் சென்று சார்ஜ் செய்யும் சௌகரியம்தான் உங்களது முதல் முக்கியத் தேவை என்று ஆசைப்படுபவர்கள், சற்றே கூடுதல் விலை இருந்தாலும் கண்ணை மூடிக்கொண்டு ஹீரோ விடா VX2 பிளஸ் (VIDA VX2 Plus) மாடலையே தேர்வு செய்யலாம்.