டெல்லி : எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உலகில் தனக்கென ஒரு தனி முத்திரையை பதித்த ஏத்தர் எனர்ஜி நிறுவனம், தற்போது நடுத்தர குடும்பங்களை குறிவைத்து தனது புதிய படைப்பான "ஏத்தர் கோனார்க்" (Ather Konarc) ஸ்கூட்டரை இந்திய சந்தையில் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்துள்ளது. இதுவரை ஸ்போர்ட்டியான மற்றும் பிரீமியம் ரக ஸ்கூட்டர்களை மட்டுமே தயாரித்து வந்த ஏத்தர், முதன்முறையாக எளிய மக்களும் வாங்கும் வகையில் மிகக் குறைந்த விலையில் இந்த ஸ்கூட்டரை களமிறக்கியுள்ளது. ஏத்தரின் புத்தம் புதிய இஎல்-01 (EL-01) பிளாட்ஃபார்ம் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட முதல் ஸ்கூட்டர் இது. எனவே, இதனுடைய விலை எவ்வளவு மைலேஜ் எவ்வளவு கிடைக்கும் என்பதை பற்றி விவரமாக பார்ப்போம்.
வடிவமைப்பு மற்றும் வண்ணங்கள்
ஏத்தர் கோனார்க் ஸ்கூட்டர் பார்ப்பதற்கு மிகவும் எளிமையாகவும், அதே சமயம் கம்பீரமாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. குடும்பத்தோடு பயணிப்பவர்களுக்கு ஏற்றவாறு இதன் தோற்றம் சற்று அமைதியான மற்றும் நேர்த்தியான டிசைனைக் கொண்டுள்ளது.
இந்த ஸ்கூட்டர் மொத்தம் நான்கு விதமான அட்டகாசமான இரட்டை வண்ணக் கலவைகளில் விற்பனைக்கு வருகிறது. குவார்ட்ஸ் ஒயிட்/ப்ளூ, மெஜஸ்டிக் கிரே/பிளாக், செலிஸ்டியல் கோல்ட்/ப்ளூ மற்றும் லூமென் காப்பர்/பிளாக் ஆகிய நிறங்களில் இது கிடைக்கிறது. இந்த கலர்புல் தேர்வுகள் குடும்ப வாடிக்கையாளர்களை நிச்சயம் கவரும் வகையில் அமைந்துள்ளது.
விலை மற்றும் மைலேஜ்
இந்த ஸ்கூட்டரின் மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட்டே இதனுடைய விலைதான். ஏத்தர் கோனார்க் ஸ்கூட்டர் எஸ்-லைன் (S-Line) மற்றும் இஸட்-லைன் (Z-Line) என இரண்டு முக்கிய பிரிவுகளின் கீழ் மொத்தம் ஆறு வேரியண்ட்களில் கிடைக்கிறது.
இதனுடைய ஆரம்ப விலை வெறும் 99,999 ரூபாய் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஏத்தர் நிறுவனத்தின் தயாரிப்புகளிலேயே மிகக் குறைந்த விலையில் கிடைக்கும் ஸ்கூட்டர் இதுதான். விலை மற்றும் மைலேஜ் வாரியாகப் பார்க்கும்போது, எஸ்-லைன் பிரிவில் 100 கிலோமீட்டர் மைலேஜ் தரும் பேஸ் மாடல் 99,999 ரூபாய்க்கும், 125 கிலோமீட்டர் மைலேஜ் மாடல் 1,21,999 ரூபாய்க்கும், 161 கிலோமீட்டர் மைலேஜ் தரும் டாப் மாடல் 1,44,999 ரூபாய்க்கும் கிடைக்கிறது.
அதே சமயம், அதிக வசதிகள் கொண்ட இஸட்-லைன் பிரிவில் 125 கிலோமீட்டர், 161 கிலோமீட்டர் மற்றும் அதிகபட்சமாக 200 கிலோமீட்டர் மைலேஜ் தரும் வேரியண்ட்களும் உள்ளன. இந்த இஸட்-லைன் மாடல்களின் விலையை ஏத்தர் நிறுவனம் இன்னும் சில நாட்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளது. வாடிக்கையாளர்கள் தங்களின் பட்ஜெட் மற்றும் தேவைக்கேற்ப சிறந்த மாடலைத் தேர்வு செய்துகொள்ளலாம்.
என்னென்ன ஸ்பெஷல் இருக்கு?
ஏத்தர் கோனார்க் ஸ்கூட்டரில் ஏகப்பட்ட நவீன வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் உள்ள டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் திரை, ஏத்தரின் புதிய ஏத்தர்ஸ்டேக் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்குகிறது. இதன் மூலம் உங்கள் ஸ்மார்ட்போனை வண்டியுடன் இணைத்துக்கொள்ளலாம். திரையிலேயே நேவிகேஷன் மேப் பார்த்துக்கொள்வது, வரும் போன் கால்கள் மற்றும் மெசேஜ் அலர்ட்களை அறிவது, இசையைக் கட்டுப்படுத்துவது எனப் பல வேலைகளைச் செய்ய முடியும்.
இதில் உள்ள மற்றொரு சூப்பர் ஸ்பெஷல் வசதி "மேஜிக் கீ" எனப்படும் சாவி இல்லாத (Keyless) இயக்க முறை ஆகும். இந்த சாவி உங்களிடம் இருந்தால் போதும், எந்த பட்டனையும் அழுத்தாமல் வண்டியை ஸ்டார்ட் செய்யலாம். நீங்கள் வண்டியை விட்டு தூரமாகச் சென்றால் அது தானாகவே லாக் ஆகிக்கொள்ளும்.
ஒருவேளை சாவியை வண்டியிலேயே மறந்து வைத்துவிட்டால், திரையில் எச்சரிக்கை மெசேஜ் காட்டும். மேலும், இதில் 31 லிட்டர் கொள்ளளவு கொண்ட மிகப்பெரிய சீட்டுக்கு அடியிலான ஸ்டோரேஜ் வசதி உள்ளது. இந்த சாவி போப்பில் உள்ள ஒரு பட்டனை அழுத்தினால் போதும், சீட் தானாகவே ஓப்பன் ஆகிக்கொள்ளும்.
அசத்தலான பேட்டரி திறன்
இந்த ஸ்கூட்டரின் எஸ்-லைன் மாடல்கள் மணிக்கு 70 கிலோமீட்டர் வேகத்திலும், இஸட்-லைன் மாடல்கள் மணிக்கு 80 கிலோமீட்டர் வேகத்திலும் செல்லக்கூடியவை. நகரப் பயன்பாட்டிற்கு இந்த வேகம் மிகவும் போதுமானதாக இருக்கும். இதில் ஸ்மார்ட் ஈகோ, ஈகோ மற்றும் பவர் ஆகிய மூன்று ரைடிங் மோடுகள் கொடுக்கப்பட்டுள்ளன.
இதன் பேட்டரி திறனைப் பொறுத்தவரை 2.1 கிலோவாட், 2.7 கிலோவாட் மற்றும் 3.5 கிலோவாட் என மூன்று ஆப்ஷன்கள் உள்ளன. வண்டியுடன் 450 வாட் ஆன்-போர்டு சார்ஜர் வழங்கப்படுகிறது. இதை எளிதாக எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்லலாம். இந்த சார்ஜர் மூலம் பேட்டரியை 4 மணி நேரம் முதல் 5 மணி நேரம் 40 நிமிடங்களுக்குள் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்துவிடலாம். கூடுதலாக ஒரு போர்ட்டபிள் சார்ஜரையும் இணைத்து மொத்தம் 900 வாட் திறனில் இன்னும் வேகமாக சார்ஜ் செய்யும் வசதியும் இதில் உள்ளது.
எப்போ வரும்? எங்கே கிடைக்கும்?
ஏத்தர் கோனார்க் ஸ்கூட்டர் தற்போது இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக லான்ச் செய்யப்பட்டுவிட்டது. தமிழ்நாட்டில் சென்னை, கோவை, திருச்சி, மதுரை, தூத்துக்குடி உட்பட அனைத்து முக்கிய நகரங்களில் உள்ள ஏத்தர் எனர்ஜியின் அதிகாரப்பூர்வ ஷோரூம்களில் இந்த ஸ்கூட்டரை நீங்கள் நேரில் பார்த்து டெஸ்ட் டிரைவ் செய்து புக் செய்யலாம்.
இதற்கான டெலிவரி மற்றும் விற்பனை பணிகள் மிக விரைவில் தமிழகம் முழுவதும் முழுவீச்சில் தொடங்கவுள்ளன. சந்தையில் ஏற்கனவே இருக்கும் டிவிஎஸ் ஐகியூப், பஜாஜ் சேத்தக் மற்றும் ஹீரோ விடா விஎக்ஸ்2 ஆகிய குடும்ப ஸ்கூட்டர்களுக்கு இந்த ஏத்தர் கோனார்க் மிகக் கடுமையான போட்டியாக அமையப்போகிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.