டெல்லி : இந்தியச் சாலைகளில் சாதாரண பைக்குகளை நாம் அன்றாடம் பார்க்கிறோம். ஆனால், ஒரு சில பைக்குகள் வெறும் பயணத்திற்காக மட்டும் உருவாக்கப்படுவதில்லை; அவை ஆடம்பரம், அதிரடி வேகம் மற்றும் அந்தஸ்தின் உச்சமாகப் பார்க்கப்படுபவை! ஒரு நடுத்தர வர்க்கக் குடும்பத்தின் வாழ்நாள் சேமிப்பை விடவும், ஏன்... ஒரு சொகுசு காரின் விலையை விடவும் அதிகமான விலையைக் கொண்ட சூப்பர் பைக்குகள் இந்தியாவில் உலா வருகின்றன.

சாலைகளில் இவை கடந்து போகும் போது, ஒட்டுமொத்த கூட்டமும் அப்படியே ஸ்தம்பித்து நின்று வேடிக்கை பார்க்கும். அப்படிப்பட்ட, இந்தியாவின் டாப் 5 "கோடீஸ்வர பைக்குகள்" என்னென்ன, அவற்றின் பின்னணியில் இருக்கும் சுவாரசியங்கள் என்ன என்பதைப் பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

டூகாட்டி பனிகேல் V4 R (Ducati Panigale V4 R)

நம் அன்றாடச் சாலைகளில் பல வண்டிகளைப் பார்க்கிறோம். ஆனால், டூகாட்டி பனிகேல் V4 R (Ducati Panigale V4 R) பைக் பார்க்கவே மிகவும் கம்பீரமாக இருக்கும். இது சாதாரண வண்டி கிடையாது. ரேஸ் வண்டிகளில் பயன்படுத்தப்படும் அதிநவீன தொழில்நுட்பத்தை நேராக நம் சாலைகளுக்குக் கொண்டு வந்துள்ளது. இந்தப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் இந்த பைக்கின் விலை தோராயமாக ரூ. 84.99 லட்சம் ஆகும். ஒரு பெரிய காரின் விலையை விட இது அதிகம் என்பதால், சாலைகளில் இது போகும் போது எல்லாரும் திரும்பிப் பார்ப்பார்கள்.

இதன் உள்ளே 998சிசி டெஸ்மோசெடிசி ஸ்டிராடாலே V4 எஞ்சின் கொடுக்கப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 15,750 ஆர்பிஎம்மில் 218 hp பவரையும், 114.5 Nm வெளிப்படுத்துகிறது. வேகமாகப் போகும் போது வளைவுகளில் எளிதாகத் திரும்ப விங்லெட்டுகள் மற்றும் உயர்தர Öhlins சஸ்பென்ஷன் உதவுகின்றன. இதன் எடை 186.5 கிலோ ஆகும். இவ்வளவு வேகமாகப் போகும் வண்டியில் பெட்ரோல் மைலேஜ் பத்திப் பேச முடியாது. என்றாலும், இது ஒரு லிட்டருக்கு தோராயமாக 8 முதல் 11 கி.மீ வரை மைலேஜ் தரக்கூடும்.

ஹார்லி-டேவிட்சன் CVO ரோடு கிளைடு (Harley-Davidson CVO Road Glide)

நீண்ட தூரம் ஜாலியாகப் பயணம் செய்ய விரும்புபவர்களுக்காகவே உருவாக்கப்பட்ட ஒரு பிரம்மாண்டமான வண்டி தான் இந்த ஹார்லி-டேவிட்சன் CVO ரோடு கிளைடு (Harley-Davidson CVO Road Glide). ஹார்லி நிறுவனத்தின் மிக உயர்தரமான மாடலான இது, இந்தியாவிலேயே விற்கப்படும் மிக விலை உயர்ந்த ஹார்லி பைக் ஆகும். இதன் எக்ஸ்-ஷோரூம் விலை தோராயமாக ரூ. 67.37 லட்சம் ஆகும். இதன் ராயல் தோற்றத்தைப் பார்த்தாலே ரோட்டில் போவோர் வருவோர் எல்லாரும் வியந்து போய் நிற்பார்கள்.

இந்த பைக்கில் சத்தமும், பவரும் அள்ளும் வகையில் 1,977சிசி மில்வாக்கி-எயிட் VVT 121 எஞ்சின் கொடுக்கப்பட்டுள்ளது. இது 115 bhp பவரையும், அசுரத்தனமான 189 Nm அசால்ட்டாக வெளிப்படுத்துகிறது. லாங் டிரைவ் போகும் போது காற்று முகத்தில் பலமாக அடிக்காமல் இருக்க 'ஷார்க்னோஸ் ஃபேரிங்' டிசைன், வண்டியின் விபரங்களை அறிய 12.3 இன்ச் கலர் TFT டிஸ்ப்ளே மற்றும் பாட்டு கேட்டுக்கொண்டே செல்ல சூப்பரான பிரீமியம் மியூசிக் சிஸ்டம் எனப் பல வசதிகள் இதில் உள்ளன. இதன் எடை சுமார் 393 கிலோ ஆகும். நெடுந்தூரப் பயணங்களுக்கு ஏற்ற இந்த பைக், ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு தோராயமாக 12 முதல் 15 கி.மீ வரை மைலேஜ் தரக்கூடும்.

ஹோண்டா கோல்ட் விங் டூர் (Honda Gold Wing Tour)

லாங் டிரைவ் போகும் போது கொஞ்சம் கூட டயர்ட் ஆகாமல், சோபாவில் உட்கார்ந்து போவது போல ராஜமரியாதையுடன் பயணிக்க ஹோண்டா கோல்ட் விங் டூர் (Honda Gold Wing Tour) தான் உலகிலேயே சிறந்த பைக்காகும். ஜப்பானில் இருந்து அப்படியே முழுசாக இறக்குமதி செய்யப்படும் இந்த சொகுசு பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை தோராயமாக ரூ. 42.82 லட்சம் ஆகும். இதன் தோற்றமும் வசதிகளும் ரோட்டில் போகும் போது தனி கெத்தைக் கொடுக்கும்.

இந்த பைக்கில் கார்களுக்கு இணையாக 1,833சிசி லிக்யூடு-கூக்டு பிளாட்-சிக்ஸ் (6-cylinder) எஞ்சின் கொடுக்கப்பட்டுள்ளது. இது 126.4 hp பவரையும், மிரட்டலான 170 Nm (டார்க்) அசால்ட்டாக வெளிப்படுத்துகிறது. கியர் மாற்றும் கவலையே இல்லாமல் இருக்க 7-ஸ்பீடு DCT ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ், பட்டன் அமுக்கினால் அட்ஜஸ்ட் ஆகும் விண்ட்ஷீல்டு, கனமான வண்டியை எளிதாக ரிவர்ஸ் எடுக்கவும் மெதுவாக நகர்த்தவும் உதவும் ரிவர்ஸ் அண்ட் வாக்கிங் அசிஸ்ட் மோடுகள் மற்றும் பாதுகாப்புக்காக ஏர்பேக் (Airbag) சிஸ்டம் எனப் பல சூப்பர் சொகுசு வசதிகள் இதில் உள்ளன. இதன் எடை 390 கிலோ ஆகும். பெரிய 6-சிலிண்டர் எஞ்சின் என்பதால், இது ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு தோராயமாக 10 முதல் 13 கி.மீ வரை மைலேஜ் தரக்கூடும்.

பிஎம்டபிள்யூ M 1000 R (BMW M 1000 R)

காரில் ரேஸ் பிரியர்களுக்கு 'M' சீரிஸ் எப்படி ஒரு கனவோ, அதே போல பைக் பிரியர்களுக்காக பிஎம்டபிள்யூ மோட்டராட் நிறுவனம் கொண்டு வந்த மாஸ் பைக் தான் இந்த பிஎம்டபிள்யூ M 1000 R (BMW M 1000 R). வண்டியின் எஞ்சின் மற்றும் பாகங்கள் வெளியில் தெரியும் படியான 'நேக்கட்' (Naked) டிசைனில், பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் ஸ்பெஷல் 'M' முத்திரையுடன் வரும் ஒரே பைக் இதுதான்!

இதன் எக்ஸ்-ஷோரூம் விலை தோராயமாக ரூ. 33.50 லட்சம் ஆகும். இதன் முரட்டுத்தனமான லுக்கைப் பார்த்தாலே பைக் லவ்வர்ஸ்க்கு தூக்கம் கெட்டுவிடும்.இதில் 999சிசி இன்லைன் 4-சிலிண்டர் ஷிஃப்ட் கேம் எஞ்சின் கொடுக்கப்பட்டுள்ளது. இது மின்னல் வேகத்தில் 210 hp பவரையும், 113 Nm (டார்க்) பாய்ந்து வெளிப்படுத்துகிறது. இந்த வண்டியைத் தட்டிவிட்டால் மணிக்கு 280 கி.மீ வேகம் வரை அசால்ட்டாகப் பறக்கும். காஸ்ட்லியான கார்பன் ஃபைபரால் செய்யப்பட்ட விங்லெட்டுகள் மற்றும் சாவி இல்லாமலேயே வண்டியை ஸ்டார்ட் செய்யும் கீலெஸ் இக்னிஷன் போன்ற நவீன வசதிகள் இதில் உள்ளன. வண்டியின் எடை 210 கிலோ ஆகும். அசுர வேகம் கொண்ட இந்த பைக், ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு தோராயமாக 12 முதல் 14 கி.மீ வரை மைலேஜ் தரக்கூடும்.

கவாசகி நிஜா ZX-10R (Kawasaki Ninja ZX-10R)

ரேஸ் வண்டி ஓட்டப் பிடிச்சவங்க எல்லாருக்கும் ரொம்பப் பிடித்தமான ஒரு சூப்பர் பைக் தான் இந்த கவாசகி நிஞ்சா ZX-10R (Kawasaki Ninja ZX-10R). இந்தப் பட்டியலில் இருக்கும் மற்ற வண்டிகளுடன் ஒப்பிடும் போது, இதன் விலை சற்று குறைவு என்றாலும், கெத்துல எந்தக் குறையும் இருக்காது.இதன் எக்ஸ்-ஷோரூம் விலை தோராயமாக ரூ. 20.79 லட்சம் ஆகும். ரோட்டில் இதன் பச்சை நிற அசுர நடை பல இளைஞர்களின் மனதை உடனே அள்ளிவிடும்.இந்த பைக்கில் 998சிசி லிக்யூடு-கூக்டு இன்லைன்-4 சிலிண்டர் எஞ்சின் கொடுக்கப்பட்டுள்ளது. இது இயல்பாகவே 200 hp பவரையும், ராம் ஏர் (RAM Air) உதவியுடன் மிரட்டலான 210 hp பவரையும் தருகிறது; கூடவே 114.9 Nm (டார்க்) கக்கித் தள்ளும்.

வண்டியை வளைவுகளில் திருப்ப ஷோவா சஸ்பென்ஷன், ஓஹ்லின்ஸ் எலக்ட்ரானிக் ஸ்டீயரிங் டேம்பர், கார்னர் பியூரிங் ABS மற்றும் டிராக்ஷன் கன்ட்ரோல் எனப் பல ரேஸ் டெக்னாலஜி வசதிகள் இதில் நிறைந்துள்ளன. வண்டியின் எடை 207 கிலோ ஆகும். இவ்வளவு பவர் இருந்தும், இது சிட்டியிலும் ஹைவேஸிலும் சேர்த்து ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு தோராயமாக 12 முதல் 15 கி.மீ வரை மைலேஜ் தரக்கூடும்.

பைக்குகளின் விலையையும், அவற்றின் அசுரத்தனமான பவரையும் பார்த்து மிரண்டு போயிட்டீங்களா? நாம் மேலே பார்த்த இந்த 5 பைக்குகளும் வெறும் டூ-வீலர்கள் கிடையாது; சாலைகளில் பறக்கும் நவீன காலத்து அதிசய எந்திரங்கள்! கோடி ரூபாயை நெருங்கும் இந்த பைக்குகள் நடுத்தர வர்க்கத்தினருக்கு ஒரு எட்டாக்கனவாக இருந்தாலும், வேகம் மற்றும் பைக்கின் மீது அதீத காதல் கொண்ட கோடீஸ்வரர்களின் ஆகச்சிறந்த கனவு வாகனங்கள் இவை. உங்களிடம் இவ்வளவு பணம் இருந்தால், உங்களுக்கு பிடித்த பைக்குகளை வாங்கிக்கொள்ளுங்கள்.