டெல்லி : இந்திய இருசக்கர வாகனச் சந்தையில், தினசரி பயணங்களுக்கு எந்த மாதிரியான வாகனத்தைத் தேர்ந்தெடுப்பது என்பதில் பலருக்கும் குழப்பம் இருப்பது வழக்கம். காலங்காலமாகப் பயன்படுத்தப்பட்டு வரும் பெட்ரோல் ஸ்கூட்டரா அல்லது குறைந்த செலவில் இயக்கக்கூடிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரா? இந்த இரண்டு வகைகளில் சிறந்த தேர்வைத் தீர்மானிக்க உதவும் வகையில், மிகவும் பிரபலமான டிவிஎஸ் ஜூபிடர் (110cc) மற்றும் பட்ஜெட் விலையில் கிடைக்கும் எலக்ட்ரிக் ஸ்கூட்டரான ஜெலியோ ஈவா எக்கோ எல்எக்ஸ் (Zelio Eeva Eco LX) ஆகியவற்றில் எதை வாங்கலாம் என்பது குறித்த ஒப்பிட்டு விவரம் பற்றி விவரமாக பார்ப்போம்.
விலையும் மாடல்களும்
ஒரு வாகனத்தை வாங்கும் போது ஆரம்ப விலை என்பது மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்த இரண்டு ஸ்கூட்டர்களுக்குமான விலை வித்தியாசம் மிகவும் அதிகமாகும்.
ஜெலியோ ஈவா எக்கோ எல்எக்ஸ் (எலக்ட்ரிக்): இதன் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை சுமார் ரூ. 51,551 ஆகும். இந்த மிகக் குறைந்த விலையில் லெட்-ஆசிட் (Lead-Acid) பேட்டரி அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
டிவிஎஸ் ஜூபிடர் (பெட்ரோல்): இதன் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை சுமார் ரூ. 73,975 ஆகும்.
வித்தியாசம்: எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பெட்ரோல் ஸ்கூட்டரைக் காட்டிலும் ஆரம்ப விலையில் தோராயமாக ரூ. 22,424 குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
எஞ்சின் மற்றும் பேட்டரி
இந்த இரண்டு வாகனங்களுக்கும் இடையே உள்ள மிகப்பெரிய வேறுபாடு அவற்றின் இயக்க ஆற்றல் மற்றும் வேகம் என்று சொல்லலாம்.
டிவிஎஸ் ஜூபிடர்: இதில் 113.3சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 8.02 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும். இதன் உச்ச வேகம் மணிக்கு 82 கி.மீ ஆகும். இதனால் இது நெடுஞ்சாலைகள், மேம்பாலங்கள் மற்றும் அனைத்து வகையான சாலைகளுக்கும் ஏற்றதுடன், வேகமான முந்திச் செல்லும் (Overtaking) திறனையும் கொண்டுள்ளது.
ஜெலியோ ஈவா எக்கோ எல்எக்ஸ்: இது குறைந்த வேகத்தில் செல்லும் (Low-speed) எலக்ட்ரிக் ஸ்கூட்டராகும். இதில் பிஎல்டிசி ஹப் மோட்டார் மற்றும் லெட்-ஆசிட் பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இதன் உச்ச வேகம் மணிக்கு 25 கி.மீ மட்டுமே. இது நகரத்தின் உள்ளேயும், குடியிருப்புப் பகுதிகளுக்குள் குறுகிய தூரம் செல்வதற்கு மட்டுமே ஏற்றது. பெரிய பாலங்கள் மற்றும் ஏறுமுகமான சாலைகளில் இது சிரமப்படக்கூடும்.
மைலேஜ் விவரங்கள்
டிவிஎஸ் ஜூபிடர்: இது லிட்டருக்கு சுமார் 50 முதல் 55 கி.மீ வரை மைலேஜ் தரும். இதன் 5.1 லிட்டர் பெட்ரோல் டேங்க் மூலம் முழு டேங்க்கிற்கு 250 கி.மீ-க்கும் அதிகமான தூரம் பயணிக்கலாம். பெட்ரோல் பங்குகளுக்குச் சென்று சில நிமிடங்களில் டேங்க்கை நிரப்பிவிடலாம்.
ஜெலியோ ஈவா எக்கோ எல்எக்ஸ்: இது ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் சுமார் 60 கி.மீ தூரம் வரை இயங்கும். பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்ய 6 முதல் 7 மணி நேரம் தேவைப்படும். எனவே, தினசரி குறிப்பிட்ட குறுகிய தூரம் செல்வோருக்கு மட்டுமே இது வசதியாக இருக்கும்.
மாதாந்திர செலவு எவ்வளவு வரும்?
நீங்கள் தினமும் தோராயமாக 30 கி.மீ தூரம் பயணம் செய்வதாக வைத்துக் கொண்டால், ஆகும் செலவு விவரம் பற்றி பார்ப்போம்.
டிவிஎஸ் ஜூபிடர்: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 100 எனில், ஒரு கிலோமீட்டருக்கு சுமார் ரூ. 2 செலவாகும். மாதத்திற்கு பெட்ரோலுக்காக ரூ. 1,800 வரை செலவாகும்.
ஜெலியோ ஈவா எக்கோ எல்எக்ஸ்: மின் கட்டணம் ஒரு யூனிட்டுக்கு ரூ. 10 எனில், ஒரு முழு சார்ஜிற்கு ஆகும் மின்சாரம் போக, ஒரு கிலோமீட்டருக்கு ரூ. 0.30 முதல் ரூ. 0.50 வரை மட்டுமே செலவாகும். மாதத்திற்கு மின்சாரக் கட்டணம் ரூ. 300 முதல் ரூ. 450 வரை மட்டுமே செலவாகும்.
லாபம்: இதன் மூலம் எலக்ட்ரிக் ஸ்கூட்டரைப் பயன்படுத்தும்போது மாதத்திற்கு தோராயமாக ரூ. 1,400 வரை சேமிக்கலாம்.
உடல் அமைப்பு மற்றும் எடை விவரம்
எடை: ஜெலியோ ஸ்கூட்டர் வெறும் 80 கிலோ எடைக் கொண்டது என்பதால், முதியவர்கள் மற்றும் முதன் முதலாக பைக் கற்றுக்கொள் நினைப்பவர்கள் கூட மிகவும் எளிதாகக் கையாளலாம் மற்றும் பார்க்கிங் செய்வது எளிது. மறுபுறம், டிவிஎஸ் ஜூபிடர் 106 கிலோ எடை கொண்டது, இது நெடுஞ்சாலைகளில் அதிக வேகத்தில் செல்லும்போது சிறந்த Stability வழங்கும்.
சக்கரங்களும் பிரேக்கும்: ஜூபிடரில் 12 இன்ச் பெரிய சக்கரங்கள் உள்ளதால் பள்ளம் மேடுகளை எளிதில் கடக்கலாம். ஜெலியோவில் 10 இன்ச் சிறிய சக்கரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இரண்டு ஸ்கூட்டர்களிலும் டிரம் பிரேக்குகள் தான் வழங்கப்பட்டுள்ளன. இருப்பினும் ஜூபிடரில் கூடுதல் பாதுகாப்பிற்காக 'சிம்கிரைஸ்டு பிரேக்கிங் டெக்னாலஜி' (SBT) உள்ளது. மேலும் ஜூபிடரில் 33 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெரிய பூட் ஸ்பேஸ் (அகலமான சேமிப்பு இடம்) உள்ளது.
நவீன வசதிகள் (Features & Technology)
டிவிஎஸ் ஜூபிடர்: சீட்டைத் திறக்காமலேயே வெளியிலிருந்து பெட்ரோல் நிரப்பும் வசதி (External fuel filler), எல்இடி ஹெட்லேம்ப் மற்றும் உறுதியான மெட்டல் பாடி (Metal body) ஆகியவை இதன் பலமாகும்.
ஜெலியோ ஈவா எக்கோ எல்எக்ஸ்: இதில் முழுமையான டிஜிட்டல் டிஸ்ப்ளே, ரிவர்ஸ் கியர் (Park Assist), திருட்டுத் தடுப்பு அலாரம் (Anti-theft alarm), யூஎஸ்பி சார்ஜிங் போர்ட் மற்றும் சாவியில்லா நுழைவு (Keyless entry) போன்ற நவீன அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
உங்களுக்கு எது சிறந்தது?
நெடுஞ்சாலைகள், மேம்பாலங்கள் மற்றும் நீண்ட தூரப் பயணங்களைத் மேற்கொள்ள வேண்டியவர்கள் டிவிஎஸ் ஜூபிடர் (Petrol) ஸ்கூட்டரை வாங்கிக்கொள்ளலாம். தினசரி பயணம் கணிக்க முடியாததாகவும், 40 கி.மீ-க்கு மேல் அதிகமாகவும் இருப்பவர்களும் இதனை தேர்வு செய்யலாம். அதைப்போல, குடும்பத்துடன் பின் இருக்கையில் அமர்ந்து பயணிக்கவும், 10 ஆண்டுகளுக்கு மேல் உழைக்கக்கூடிய உறுதியான வாகனம் வேண்டுபவர்களும் இதைத் தேர்ந்தெடுக்கலாம்.
உங்கள் தினசரி பயணம் உங்கள் வீட்டைச் சுற்றியுள்ள 5 முதல் 10 கி.மீ சுற்றுவட்டாரத்திற்குள் (எ.கா: காய்கறி வாங்குவது, குழந்தைகளைப் பள்ளியில் விடுவது) மட்டுமே இருப்பவர்கள் ஜெலியோ ஈவா எக்கோ எல்எக்ஸ் (Electric) வாங்கிக்கொள்ளலாம். அதைப்போல, குறைந்தபட்ச மாதாந்திர செலவை விரும்புபவர்கள் மற்றும் வேகம் மணிக்கு 25 கி.மீ-ஐ தாண்டத் தேவையில்லை என்பவர்கள். மேலும், வீட்டில் அல்லது அலுவலகத்தில் ஸ்கூட்டரை 6 முதல் 7 மணி நேரம் பாதுகாப்பாக சார்ஜ் செய்ய மின்சார வசதி உள்ளவர்கள் இதைத் தாராளமாகத் தேர்ந்தெடுக்கலாம்.