டெல்லி:இந்தியாவின் கிராமப்புறங்கள் மற்றும் தொலைதூரப் பகுதிகளுக்குத் தடையில்லா அதிவேக இன்டர்நெட் சேவையை வழங்கும் நோக்கில், எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX) நிறுவனத்தின் கீழ் செயல்படும் ஸ்டார்லிங்க் நிறுவனம் மாபெரும் முன்னெடுப்பை எடுத்துள்ளது.
'ஜெனரேஷன் 2' (Gen 2) செயற்கைக்கோள்களுக்கான புதிய மற்றும் திருத்தப்பட்ட விண்ணப்பத்தை இந்திய விண்வெளி ஒழுங்குமுறை ஆணையமான IN-SPACe அமைப்பிடம் ஸ்டார்லிங்க் தற்போது சமர்ப்பித்துள்ளது.
கோபுரங்கள் இல்லா நேரடி சேவை
ஸ்டார்லிங்க் சமர்ப்பித்துள்ள இந்தப் புதிய விண்ணப்பத்தில் உள்ள மிக முக்கியமான மற்றும் புரட்சிகரமான அம்சம் 'டைரக்ட்-டு-டிவைஸ்' (Direct-to-Device) தொழில்நுட்பமாகும்.
வழக்கமாக மொபைல் போன்களில் இன்டர்நெட் சேவையைப் பெற உள்கட்டமைப்பு மற்றும் செல்போன் கோபுரங்கள் அவசியம். ஆனால், இந்த புதிய தொழில்நுட்பத்தின் மூலம் செல்போன் கோபுரங்களே இல்லாத மலைப்பகுதிகள், அடர்ந்த காடுகள் மற்றும் தொலைதூரக் கிராமங்களில் வசிக்கும் மக்கள் கூட, தங்கள் ஸ்மார்ட்போன்களை நேரடியாக விண்வெளியில் உள்ள செயற்கைக்கோளுடன் இணைத்து சேவையைப் பெற முடியும்.
இது இந்தியாவின் தொலைத்தொடர்புத் துறையில் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கும் என வல்லுநர்கள் கருதுகின்றனர்.
கிராமப்புற மேம்பாட்டில் எலான் மஸ்க்கின் கவனம்
இந்தத் திட்டம் குறித்து எக்ஸ் (X) தளத்தில் கருத்து தெரிவித்துள்ள எலான் மஸ்க், 'இந்தியாவில் மிகவும் பின்தங்கிய மற்றும் இணைய வசதி எட்டாத கிராமப்புற மக்களுக்கு ஸ்டார்லிங்க் சேவை பெரும் உதவியாக இருக்கும்' என்று உறுதியளித்துள்ளார்.
டிஜிட்டல் இந்தியா திட்டம் வேகமாக வளர்ந்து வந்தாலும், இன்றும் இந்தியா முழுவதும் 4ஜி வசதி கூட இல்லாத பல்லாயிரக்கணக்கான கிராமங்கள் உள்ளன. அந்த மிகப்பெரிய இடைவெளியை நிரப்பவே ஸ்டார்லிங்க் திட்டமிட்டுள்ளது.
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஏற்கனவே 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி, பல்வேறு நாடுகளில் வெற்றிகரமாக இணையச் சேவையை வழங்கி வருகிறது. அதே சேவையை தற்போது இந்தியாவிலும் விரிவுபடுத்தும் நோக்கிலேயே இந்த புதிய முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.
இந்திய டெலிகாம் சந்தையில் என்ன நடக்கும்?
கடந்த 2025ஆம் ஆண்டிலேயே முதல் கட்ட செயற்கைக்கோள்களுக்கான (Gen 1) தொலைத்தொடர்பு உரிமத்தை ஸ்டார்லிங்க் பெற்றிருந்தது. இருப்பினும், அலைக்கற்றை ஒதுக்கீடு (Spectrum allocation) தொடர்பான மத்திய அரசின் இறுதி விதிகள் மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்தின் அனுமதிகளுக்காக அந்த நிறுவனம் பல மாதங்களாகக் காத்திருக்கிறது.
தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ள இந்த 'ஜெனரேஷன் 2' விண்ணப்பம் முழுமையாக அங்கீகரிக்கப்பட்டு அலைக்கற்றை ஒதுக்கீடு கிடைத்துவிட்டால், ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் போன்ற முன்னணி இந்திய நிறுவனங்களுக்கு ஸ்டார்லிங்க் மிகப் பெரிய போட்டியாக உருவெடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.